உச்சநீதிமன்றம் திடீரென்று தெரிவிக்கும் சிலகருத்துகள் மத்திய அரசை புண் படுத்துகின்றன, நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவை நமது அரசமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களாகும். இந்தமூன்றும் சுதந்திரமாக இயங்கக் கூடியவை. ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கடமைகள் உள்ளன என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கும்பகர்ணனைப் போல் தூங்குவதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் விமர்சித்திருந்தது. இந்நிலையில், தில்லியில் தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் நான்காவது நிறுவன நாள் விழா சனிக் கிழமை தில்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தவிழாவில், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சரும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

சில நேரங்களில் உச்சநீதிமன்றத்திடம் இருந்து திடீரென்று சிலகருத்துகள் வெளியாகின்றன. இது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். இது போன்ற கருத்துகள் மத்திய அரசைப் புண்படுத்துகின்றன.

கும்ப கர்ணன் என்பது போன்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அவ்வாறு எங்கே நடந்தது? மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கான உரிமை கோருவதற்கு தேவைப்படும் எம்பி.க்களின் பலம் 55 ஆகும். கட்சிகளுக்கு எத்தனை இடங்களை அளிப்பது என்பதை முடிவுசெய்வது மக்களை பொருத்தது. சம்பந்தப்பட்ட கட்சிக்கு (காங்கிரஸ்) எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்குத் தேவையான எம்.பி.க்களை மக்கள் அளிக்காத போது நாங்கள் என்ன செய்யமுடியும்?

ஏழாவது மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவரே கிடையாது. அப்போது அதுகுறித்து யாரும் பேசவில்லை. இதுகுறித்து பத்திரிகைகள் எழுதினாலோ, யாராவது அது குறித்துப் பேசினாலோ அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்தவிவகாரம் குறித்து நீதித்துறை (உச்ச நீதிமன்றம்), மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது வருத்த மளிக்கிறது. நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவை நமது அரசமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களாகும். இந்தமூன்றும் சுதந்திரமாக இயங்கக் கூடியவை. ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கடமைகள் உள்ளன. இவை முறையாக இயங்கினால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply