காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேரா நிலபேர ஊழலில் பலகோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தொடர்பாக அரியானாவில் புதிதாக பதவியேற்க உள்ள பிஜேபி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக அரியானாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடத்திவந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேராவுக்கு நில பேர ஊழலில் மாநில அரசு சட்டவிரோத சலுகைகள் காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அரசு ஒதுக்கிய நிலத்தை வங்கியில் பணம் இல்லாமலேயே வதேரா பெற்றார். பிரபலகட்டுமான நிறுவனம் அந்த நிலத்தை வாங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியது. இதில் வதேரா பலநூறு கோடி ரூபாய் லாபம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி தேர்தலில் தூக்கி எறியப் பட்டது. பிஜேபி அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து மனோகர்லால் கட்டார் தலைமையில் புதிய பிஜேபி அரசு பதவியேற்க இருக்கிறது. இந்த அரசு பதவியேற்றதும் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான வதேரா நிலபேர ஊழல் குறித்து விசாரணை நடத்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

வதேரா ஊழலுக்கு போதிய ஆதாரம் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். சோனியா காந்தியின் குடும்பத்திற்கு பரிசாக முந்தைய காங்கிரஸ் அரசு சட்டவிரோத சலுகைகளை காட்டியதன் மூலம் பல நூறுகோடி ரூபாய் வதேரா ஈட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும் இந்த ஊழல் குறித்து குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வதேராவின் நிலபேரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply