தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக ராஜீவ்பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டார். எச்.ராஜாவுக்கு கேரள பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மராட்டியம், அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களில் பா.ஜனதா விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பாளர் பதவிகளில் நேற்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக இருந்து வந்த முரளிதரராவ் மாற்றப்பட்டு, ரூடிக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளது. முரளிதரராவ், கர்நாடக பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, கேரளா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களின் பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன், டாமன், டையு யூனியன் பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளராக பா.ஜனதா பொதுச்செயலாளர் ஓ.பி.மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் பா.ஜனதா பொறுப்பாளராக செயல்பட்டார். அங்கு பா.ஜனதா அதிக இடங்களைப் பிடித்து கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கும் நிலையை பெற்றுள்ளது.

2017–ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்துடனும் ஓ.பி.மாத்தூருக்கு இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவின் மற்றொரு பொதுச் செயலாளர் ஜே.பி.நட்டா, மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில பா.ஜனதா பொறுப்பாளராக மற்றொரு பொதுச்செயலாளர் பிரபாத் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்று அரசு அமைக்க முடியாத அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜனதாவின் ஊடக பொறுப்பை கவனிக்கும் தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா, இமாசலபிரதேச பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களின் பா.ஜனதா பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:–

தினேஷ் சர்மா (குஜராத்), புபேந்தர் யாதவ் (பீகார்), அவினாஷ் ராய் கன்னா (காஷ்மீர்), திரிவேந்திர சிங் ரவத் (ஜார்கண்ட்), ரோமன் தேகா (அருணாசலபிரதேசம்), மகேந்திர சிங் (அசாம்), ராம்ஷங்கர் கதேரியா (சத்தீஷ்கார், பஞ்சாப்), புருஷோத்தம் ருபாலா (கோவா), அனில் ஜெயின் (அரியானா), வினய் சகஸ்ரபுத்தே (மத்தியபிரதேசம்), அருண் சிங் (ஒடிசா), பி.கே.கிருஷ்ணதாஸ் (தெலுங்கானா), சுனில் தேவ்தார் (திரிபுரா), ஷ்யாம் ஜஜு (உத்தரகாண்ட்), சித்தார்த் நாத் சிங் (மேற்கு வங்காளம்).

Tags:

Leave a Reply