பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கலாசாரமுகத்தை மாற்றி விட்டார் என்று சிவசேனாவின் அதிகார பூர்வ பத்திரிக்கையான சாம்னா புகழாரம் சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக சாம்னாவின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:– பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் கலாசாரமுகத்தை மாற்றிவிட்டார். நேற்றுவரை பெருநாள் திருவிழாக்களில் இப்தார் நிகழ்ச்சிகள் மட்டும்தான் தலைவர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இன்று தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. இது மிகமுக்கியமான மாற்றம். வரவேற்கத்தகுந்த நிகழ்வு.

பிரதமர் மோடி அந்த சந்தர்ப்பத்தை (தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.களுக்கு தேநீர்விருந்து வழங்கிய தருணம்) தனது திட்டங்கள் ஏழைமக்களுக்கு சென்றடையும் வாய்ப்பாக பயன் படுத்தி கொண்டார். மேலும், அனைத்து எம்.பி.க்களும் சாதாரண மனிதனின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு உழைக்க வேண்டும் என்றும் அப்போது அவர் எம்.பி.க்களிடம் கேட்டு கொண்டார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையானவைகள்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வளர்ச்சி பணிகளுக்கு என பலலட்ச கோடிகள் செலவிடப்பட்டது. எனினும், கடந்த 50 ஆண்டுகளில் உருப்படியாக அந்த அரசு எதுவும் செய்ய வில்லை. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் செலவிடப்பட்ட அந்தபணம் எங்கே சென்றது? அதனால் யார் எல்லாம் பயனடைந்தார்கள்? என்பதை புதிய அரசு இப்போது கண்டு பிடிக்க வேண்டும்.

இப்தார்விருந்து நிகழ்ச்சியை தேசிய பண்டிகை என்பதால் அதை காங்கிரஸ் வழக்கமாக கொண்டாடியது. இதன்மூலம் ஓட்டு வங்கி அரசியலிலும் ஈடுபட்டது. ஆனால், ஓட்டு வங்கி அரசியல் சகாப்தம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது.என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply