ஹரியாணா மாநிலத்தில் முதல்முறையாக அமைந்திருக்கும் பாஜக அரசின் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் மனோகர் லால் கத்தார். ஆர்எஸ்எஸ்ஸில் 40 ஆண்டுகள், பாஜகவில் 20 ஆண்டுகள் என்று அழுத்தமான பின்னணி கொண்ட கத்தார், ஆர்எஸ்எஸ்ஸில் தீவிரமாகப்

பணியாற்ற வேண்டும் என்பதற்காகத் திருமணமே செய்து கொள்ளாதவர். நிர்வாகத் திறன் கொண்டவர். கடுமையான உழைப்பாளி. எல்லாவற்றுக்கும் மேலாக, சொல்லைவிடச் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதனால்தான் இவரை முதல்வராக்க மோடியும் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். ஜாட் இனத்தவரின் ஆதிக்கம் நிறைந்த ஹரியாணாவில், 18 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாபி இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. மோடியின் அபிமானத்தையும் அன்பையும் பெற்ற கத்தார், மோடியைப் போலவே எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்.

இவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள். இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ரோத்தக் மாவட்டத்துக்குப் பிழைப்பதற்காக வந்தவர்கள். அம்மாவட்டத்தின் நிந்தனா கிராமத்தில் 1950-களில் இவரது தந்தையும் தாத்தாவும் சேர்ந்து ஒரு கடை வைத்த பின்னர், குடும்ப வறுமை ஓரளவு நீங்கியது. 1954-ல் பிறந்த கத்தார், டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புப் படித்தபோது, டெல்லியின் புகழ்பெற்ற சதர் பஜார் பகுதியில் கடை ஒன்றையும் நடத்தினார். தனது 24-வது வயதில், ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 1994-ல் பாஜகவில் இணைந்தார்.

தேர்தல் பணிகளில் முனைப்புடன் உழைப்பது இவரது தனிச்சிறப்பு. பஞ்சாப், ஹரியாணா, சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் பொறுப்பை ஏற்றுக் கடுமையாக உழைத்தவர். 1996-ல் ஹரியாணா மாநில பாஜக பொறுப்பாளராக மோடி இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கத்தாருக்கு உண்டு. குஜராத்தை உலுக்கிய பூகம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியில், 2002-ல் நடந்த தேர்தலில் பணியாற்ற இவரைத்தான் நியமித்தார் மோடி. அந்தத் தேர்தலில் வென்றுதான் முதல்முறையாக முதல்வரானார் மோடி. அதேபோல், மக்களவைத் தேர்தலின்போது ஹரியாணா மாநிலத் தேர்தல் பொறுப்பையும் ஏற்றது கத்தார்தான். இவரது உழைப்பால் 7 தொகுதிகளில் வென்றது பாஜக. இவர் போட்டியிட்ட கர்னால் தொகுதியில்தான் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி.

கத்தாரின் இந்த வெற்றிப் பின்னணிதான், ஹரியாணா பாஜக தலைவர் ராம் விலாஸ் ஷர்மா, கேப்டன் அபிமன்யூ, சவுத்ரி வீரேந்தர் சிங் போன்ற முக்கியத் தலைவர் களையெல்லாம் தாண்டி, இவரை முதல்வராகத் தேர்வுசெய்ய வைத்தது. முதல் முறையாகத் தேர்தலில் நின்று, முதல்முறையே வென்று முதல்வரானவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தவிர, பூபிந்தர் சிங் ஹூடாவின் சொந்த ஊரான ரோத்தக்கில் அவரது செல்வாக்கைக் குறைக்கவும் கத்தாரை பாஜக பயன்படுத்திக்கொள்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருவருக்கும் இடையே உரசலும் தொடங்கி விட்டது. பஞ்ச்குலாவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹூடா கலந்து கொள்ளாதது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ஹூடா.

"மக்கள் முன்னிலையில் வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வழிநடத்துவேன். ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல் கடமை" என்று குறிப்பிட்டிருக்கிறார் கத்தார். கட்சி நிர்வாகத்தில் தேர்ந்தவர் என்றாலும், இதுவரை அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இல்லை. எனினும், உறுதிமிக்க மனிதரான கத்தார், ஆட்சி நிர்வாகத்திலும் சாதித்துக் காட்டுவார் என்று நம்புவோம்.

வெ. சந்திரமோகன்,

நன்றி; ஹிந்து

Leave a Reply