மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பா.ஜ.க முதல்வராக தேவேந்திர பட்னா விஸ் பதவியேற்று கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவி யேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜக மொத்தம் உள்ள 288 இடங்களில் 122 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சியமைக்க 145 இடங்கள்தேவை என்ற நிலையில், பாஜக வசப்படுத்திய இடங்களில் எண்ணிக்கை 122தான் என்பதால் பிறகட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது பாஜக. ஆனால், துணை முதல்வர் பதவி, முக்கிய இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவிகளை தங்களுக்கு அளித்தால் ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என்று சிவசேனா கெடுபிடிசெய்தது. இதனால் சிவசேனாவை ஒதுக்கியே வைக்க பாஜக திட்டமிட்டது.

இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து 41 தொகுதிகளை வென்றுள்ள தேசியவாத காங்கிரஸ்கட்சி, பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியிலிருந்து அளிக்க தயார் என்றது.

இதனிடையே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக அதாவது முதல்வராக தேவேந்திர பட்னாவிசை அக்கட்சி எம்எல்ஏ.,க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத்தொடர்ந்து, எந்த கட்சியின் ஆதரவையும் கோராமல் தனித்தே ஆட்சியமைக்க பாஜக முடிவு செய்தது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை மைனாரிட்டியாகவே ஆட்சியை தொடர பாஜக முடிவு செய்தது. இதையடுத்து மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடந்தது.

மராட்டிய ஆளுநர் வித்தியா சாகர் ராவ் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவர் கடவுளின் பெயரால் பதவிபிரமாணம் செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநில வரலாற்றில் இவர் தான் முதலாவது பாஜக முதல்வராகும். மொத்தத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் 27வது முதல்வராகும்.

இதையடுத்து 7 அமைச்சர்களும், 2 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வரோடு சேர்த்து பத்துபேர் கொண்ட சிறிய அமைச்சரவை முதல்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இறுதி செய்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்களாக பதவியேற்றவர்களில், ஏக்நாத் கட்சே, சுதிர் முன்கான் திவார், தவ்டே வினோத், பிரகாஷ் மேத்தா, சந்திர காந்த் பாட்டீல், விபத்தில் மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜாமுண்டே, விஷ்ணு சவ்ரா ஆகியோர் கேபினெட் அந்தஸ்துகொண்ட அமைச்சர்களாகும். திலிப் காம்ப்ளி, வித்யா தாக்கூர் ஆகிய இருவரும் இணை அமைச்சர்களாகும்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, கோவா, குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதே போல தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல்பட்டேல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், ஆஷாபோஸ்லே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply