வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்வதாகவும், எனவே அந்தபணத்தை மீட்பது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 'மனம் திறந்த பேச்சு' என்ற பெயரில் கடந்த மாதம் வானொலியின் மூலம் நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தினார். அதேபோல் நேற்று மீண்டும் அவர் வானொலியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு இன்று முதன் முறையாக உங்களை சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சென்ற முறை நான் இங்கு உரையாற்றிய பிறகு புதிய உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் பெற்று இருக்கிறேன்.

இந்த நாட்டின் இளைஞர்கள் தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற முன்வருகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தேடுகிறார்கள்.

கடந்த முறை நான் உரையாற்றிய போது, அனைவரும் குறைந்தது ஒரு கதர் ஆடையாவது வாங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். முழுக்க கதர் ஆடை அணிபவர்களாக யாரையும் மாறுவதற்காக அதனை நான் கூறவில்லை.

ஆனால், நான் உரை நிகழ்த்திய ஒரு வாரத்தில் கதர் ஆடைகளின் விற்பனை 125 சதவீதம் அதிகமானது என்று எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதிக்கு பிறகு ஒரு வாரத்தில் நடைபெற்ற விற்பனையை விட இந்த ஆண்டு இரு மடங்காக விற்பனை அதிகரித்து இருக்கிறது.

இந்த நாட்டு மக்களுக்கு என்னுடைய மனத்தின் ஆழத்தில் உள்ள வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய வார்த்தைகளிலும் திட்டங்களிலும்உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் ஒரு விஷயத்தை உங்களிடம் உறுதியுடன் கூற விரும்புகிறேன்.

கருப்பு பணத்தை பொறுத்தவரை உங்களுடைய இந்த சேவகன் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நாட்டில் இருந்து வெளியில் உள்ள பணத்தில் ஒவ்வொரு பைசாவையும் இந்த நாட்டில் உள்ள ஏழைகளுக்காக திருப்பிக்கொண்டு வந்தாக வேண்டும். இது என்னுடைய வாக்குறுதியாகும்.

இதற்கான வழிமுறைகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் கருப்பு பண விஷயத்தில் நாங்கள் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று எனக்கோ, அரசாங் கத்துக்கோ, உங்களுக்கோ அல்லது முந்தைய அரசாங்கத்துக்கோ வெளிநாடுகளில் எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த முறையில் ஒவ்வொரு ஊகங்களை கூறி வருகிறார்கள். நான் அந்த வகையான ஊகங்களில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அங்கு எத்தனை பணம் இருந்தாலும் அது இந்த நாட்டின் ஏழைகளின் பணம். அது இங்கே திரும்பி வரவேண்டும்.

இது குறித்து என்னுடைய முயற்சிகளில் எந்தவிதமான குறையும் இருக்காது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக நான் எப்போது என்ன செய்ய வேண்டுமோ அதனை உங்களுக்காக கண்டிப்பாக செய்தே தீருவேன்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற விஷயம், ஒரு மக்கள் இயக்கமாக மாறும் என்று யாராவது கற்பனை செய்தார்களா? தூய்மை இந்தியா திட்டத்தினால் மேலும் பல நல்ல பயன் கள் விளைவதை என்னால் பார்க்க முடிகிறது. அனைத்து அரசாங்கங்களும் நகராட்சிகளும் குப்பைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது.

ஊடகங்களும் இந்த விஷயத்தில் மிகவும் அற்புதமான வகையில் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றன. இனி நாங்கள் எங்கும் குப்பைகளை அனு மதிக்க மாட்டோம் என்று சாமானிய மக்களும் கூறும் நிலை உருவாகி இருக்கிறது.

இப்போதெல்லாம் என்னை சந்திக்க வரும் அரசாங்க அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள், வர்த்தக பிரமுகர்கள், விஞ்ஞானத் துறையினர் என்று அனைவரும் சமூக மேம்பாடு பற்றியே அதிகமாக பேசுகிறார்கள். சிலர் தூய்மை பற்றியும் சிலர் கல்வி குறித்தும் சமூக மாற்றங்கள் குறித்தும் என்னுடன் விவாதிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் முன்னேற்றத்தின் பாதையில் முன்னேறி சென்று கொண்டு இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக உள்ளது.

குப்பைகளாலும் கழிவுகளாலும் வியாதிகள் ஏற்படுகின்றன என்பது சரிதான். ஆனால் இந்த வியாதிகள் எங்கே ஏற்படுகின்றன? செல்வந்தர்களின் வீடுகளிலா? எல்லோருக்கும் முன்பு ஏழைகளின் வீடுகளில் தானே வியாதிகள் தாக்குகின்றன? எனவே நாம் இந்த சுத்தப்படும் இயக்கத்தில் ஈடுபடுவதால் ஏழைகளுக்கு உதவும் செயலில் ஈடுபடுவதாகத் தான் அர்த்தம்.

நம்முடைய ஏழை குடும்பங்கள் வியாதியால் பாதிக்கப்படவில்லை என்றாலே அவர்களின் துயரத்தில் பாதி குறைந்து விடும். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் குடும்பத்துக்காக உழைக்க முடியும். பணம் ஈட்டி குடும்பத்தை நடத்த முடியும். எனவேதான் தூய்மை இயக்கம் என்னுடைய ஏழை சகோதர சகோதரிகளின் சுகாதாரத்தை மையமாக வைத்து செயல்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு நான் சியாச்சின் சென்று அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடினேன். எத்தனை கடினமான சூழ்நிலையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கழிக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தேன். இந்த நாட்டைக் காக்கும் வீரர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நம்முடைய வீரர்கள் சுமார் 140 நாடுகளின் வீரர்களை பின்தள்ளி பெருமைக்குரிய தங்கப்பதக்கத்தை இந்த நாட்டுக்கு பெற்றுத் தந்திருக்கின்றனர். உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அந்த வீரர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply