பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார். அதே சமயம், ராகுல் காந்தியைப் பொறுத்த வரை அவர் ஒரு தலைவராக இன்னும் வளரவே இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தே சாய் கூறியுள்ளார்.

சர்தேசாய், "2014 The Election That Changed India" என்றபெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் மோடி குறித்தும், புதியமத்திய அரசு குறித்தும், ராகுல்காந்தி குறித்தும், 2014 லோக்சபா தேர்தல் குறித்தும் எழுதியுள்ளார் சர்தேசாய்.

இந்தநூலில் மோடியை இந்திரா காந்தியுடன் அவர் ஒப்புமைப் படுத்தியுள்ளார். அதேசமயம், ராகுல் காந்தியை வலிமையில்லாத தலைவராக அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

மோடி கிட்டத்தட்ட இந்திரா காந்தியைப்போல இருக்கிறார். மோடியின் தலைமைத்துவ ஸ்டைல் இந்திரா காந்தியை போலவே உள்ளது.

எப்படி இந்திரா காந்தி, எதிர்க்கட்சியினரை கண்டு அச்சப்படாமல், தைரியமாக செயல் பட்டாரோ அதேபோல மோடியும் இருக்கிறார். அவர் காங்கிரஸ்கட்சிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து தருவது குறித்துக் கவலைப்படவே இல்லை என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும்.

அமைச்சரவையிலும் தனது பிடியை இறுக்கமாக வைத்துள்ளார் மோடி. அமைச்சர்களை முழுமையாக அவர் கட்டுப்படுத்துகிறார்.

அமைச்சர்கள் மத்தியில் ஒரு பயஉணர்வை அவர் விதைத்துள்ளார். என்னிடம் பேசிய ஒரு அமைச்சர் கூறுகையில், மோடியி்ன் அதிகாரப் பூர்வ வீட்டுக்குப் போனால், பின்வாசல் வழியாகத்தான் போகிறாராம். வீட்டு வராண்டாவில் நின்று கொண்டு யாருடனும் அவர் பேசுவதில்லையாம். எந்த இடத்திலிருந்து மோடி நம்மைக் கண்காணிக்கிறார் என்பதை ஊகிக்கவே முடியாது என்கிறார் அவர். வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக்குப் போய்த்தான் பேசுவாராம்.

அருண் ஜேட்லியை முழுமையாக நம்புகிறார் மோடி. அதேபோல அமைச்சர்களை தீர்மானித்ததும் கூட அருண்ஜேட்லியும், அமீத் ஷாவும் தான். அவர்கள் கொடுத்த பட்டியலை இறுதிசெய்தது மட்டுமே மோடியின் வேலை.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஒரு தனிப் பெரும் தலைவராக உருவெடுக்கத் தவறிவிட்டார். ஒரு சிறந்த தலைவர் என்ற தகுதியை அவர் ஏற்படுத்தி கொள்ளவில்லை, நிரூபிக்கவும் தவறிவிட்டார்.

தள்ளாட்டத்தில் இருக்கும் தனதுகட்சியை தூக்கிநிறுத்த அவரால் முடியவில்லை. நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தும்கூட அவரால் அந்த கமாண்டிங் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த முடியவில்லை.

இன்னும் குறிப்பாக சொல்வ தானால், ராகுல்காந்தியை அவரது சொந்த கட்சியினரேகூட பெரிதாக மதிப்பதில்லை.

காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் என்பது காங்கிரஸை பொறுத்த வரை பெரியசொத்தாக இருந்தாலும் கூட ராகுல்காந்தியின் தலைமைத்துவ பண்பு அதை நிரூபிக்க தவறிவிட்டது.

காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகுதியைமட்டும் இனியும் காங்கிரஸ் கட்சி பார்த்தால் கட்சிக்கு அபாயம் தான். மாறாக திறமை அடிப்படையிலான தலைவர்களை கொண்டுவர அது முயலவேண்டும். புதிய நோக்கங்கள், சிந்தனைகள், இலக்குகளுடன் அது செயல்பட்டால் தான் கட்சியை காப்பாற்ற முடியும்.

இப்போதைய நிலையில் மோடியை எதிர்க்க வேண்டுமானால் காங்கிரஸுக்கு அவரைப் போன்ற ஒருசக்தி வாய்ந்த தலைமை தேவை. நிச்சயம் அப்படிப்பட்ட தலைமையால் தான் மோடியை அடுத்ததேர்தலில் எதிர்க்கவாவது முடியும் என்று கூறியுள்ளார் சர்தேசாய்.

Leave a Reply