முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவின் போது உரிய அனுமதியின்றி மேடையில் பிரதமர் அருகே அமர்ந்திருந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மும்பையில் கடந்தமாதம் 31-ந் தேதி முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பிரதமர் அருகே மேடையில் சந்தேகத்துக்கு இடமாக ஒருநபர் உரிய அனுமதியின்றி அமர்ந்திருந்தார்.

விழா நிறைவில் அவர் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் புகைப் படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமரின் அருகே அனுமதி யின்றி நபர் ஒருவர் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது. தற்போது அவரை போலீசார் கைதுசெய்து உள்ளனர். விசாரணையில், அவரதுபெயர் மிஸ்ரா என்று தெரியவந்தது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11-ந்தேதி வரை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் கூறுகையில், ''பிரதமர் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் உட்காருவது நல்லதல்ல. இது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்'' என்றார்.

Leave a Reply