ரயில்வே திட்டங்களை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப் படாமல் தடுக்கவும், குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் அவற்றை முடிப்பதற்கான வழி முறைகளை, உருவாக்கவும், புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ்பிரபு, வெகுமதி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

சுரேஷ் பிரபு, ரயில்வே வாரியம் மற்றும் அதன் உறுப்பினர் களுக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

ரயில்வேயால் அமல்படுத்தப்படும் திட்டங்கள், நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கப் படக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அவற்றை முடிக்கவேண்டும். அதற்கேற்ற வழிமுறைகளையும், கொள்கைகளையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும். நிர்ணயித்தபடி, குறிப்பிட்ட கால கட்டத்திற்குள், ரயில்வே திட்டங் களை முடிக்கும் அதிகாரிகள் குழுவிற்கும், அந்த குழுவின் தலைவருக்கும், திட்டச்செலவில், 2 சதவீதம் வெகுமதியாக வழங்கப்படும்.

திட்டத்தின் அளவு மற்றும் செலவை பொறுத்து, இந்த 2 சதவீத வெகுமதி குறைக்கப் படலாம். ஆனால், எந்த சூழ்நிலையிலும், 2 சதவீதத்திற்கு அதிகமாக வழங்கப்படாது. அதே நேரத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், ரயில்வே திட்டப் பணிகளை முடிக்காத அதிகாரிகளின் வருடாந்திர அறிக்கையில், அவர்களின் செயல் பாடுகள் சரியில்லை என, குறிப்பிடப்படும். இது, பதவி உயர்வு உட்பட, பலவிஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ரயில்வே வாரியமானது, மேற் பார்வையிடும் அமைப்பாகவே செயல்படவேண்டும்.

அதற்கேற்ற வகையில், கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து வழங்கவேண்டும். டெண்டர்கள் உட்பட, வர்த்தக ரீதியான சில விஷயங்களை எல்லாம், மண்டல அளவிலான பொதுமேலாளர்களே முடிவுசெய்ய வேண்டும். அவற்றில் அமைச்சகத்தின் தலையீடு இருக்க கூடாது.ஒவ்வொரு பகுதியிலும், ரயில்வே துறையின் சேவையும், ரயில்களின் இயக்கமும், சர்வதேச தரத்தில் இருக்கவேண்டும். இவ்வாறு, சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply