தமிழக மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத்தீர்வு காணப்படும் என தமிழக பாஜக தலைவர்கள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.

தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க் கிழமை சந்தித்தனர். இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை விடுதலை செய்வது, அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை மீட்பது, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்டவை தொடர்பாக மீனவபிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை சுஷ்மா ஸ்வராஜிடம் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கினார். இதைத்தொடர்ந்து, மீனவ பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுஷ்மா ஸ்வராஜிடம் மனு தந்தனர் . சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

"தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவ பிரதிநிதிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும், அந்தநாட்டு நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சுஷ்மா ஸ்வராஜை கேட்டு கொண்டனர்.

இதையடுத்து, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களை விடுதலைசெய்ய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத்தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். விரைவில் நிரந்தரத்தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கையுடன் கூறினார்' என்றார் ராதாகிருஷ்ணன்.

இச்சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், "இந்தக்குழுவில், மீனவர் பிரச்னைகள் குறித்து நன்கு அறிந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோடி குரூஸýம் கலந்து கொண்டார். மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவரும் சில ஆலோ சனைகளை சுஷ்மா ஸ்வராஜிடம் வழங்கினார் என்றார்.

Leave a Reply