காங் கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வாசன் தனி கட்சி ஆரம்பித்து இருப்பது சந்தர்ப்பவாதமாக விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மாநில உரிமைகளுக்கு, பிரச்சினைகளுக்கு விசேஷமாக என்றுமே குரல் கொடுத்ததில்லை என்பது பரவலாக தெரிந்த விஷயம்தான். வாசன் இத்தனை ஆண்டுகாலம் பதவி வகித்துவிட்டு இப்போது கட்சி ஒடிந்த நிலையில் இருக்கும்போது விட்டுச் செல்வது என்ன நியாயம் என்ற கேள்வி

எழுப்பப்படுகிறது. மேலெழுந்தவாரியாக நியாயமாக தோன்றினாலும் கூட, கடந்த 1௦ ஆண்டுகலில் வாசனின் குரல் எடுபடவே இல்லை என்பதும் பல்வேறு வகைகளில் அவரது முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தன என்பதும் உண்மை.

இன்று காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவேண்டும் என்று ஓங்கிய குரல் கொடுக்கும் கார்த்தி சிதம்பரம் ஒரு வர்த்தக பிரமுகராக்த்தான் தோற்றமளிக்கிறாரே தவிர அரசியல் பிரமுகராக அல்ல. எந்த ஆட்சி அதிகாரத்திலும் இல்லாமல் மூப்பனார் கட்சியை வளர்த்தார். மூப்பனாருக்கு பிறகு தான் வாசன் கட்சியில் முக்கிய இடம் பெற்றார். ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கதை வேறு. அசைக்கமுடியாத நிதி அமைச்சர் இவர் தந்தை என்பதால் இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைத்தது. மற்றபடி கட்சி பற்றியோ, கட்சி அமைப்பு பற்றியோ வாசனுக்கு இருக்கும் அனுபவாத்தொடு ஒப்பிடாமல் இவரது அனுபவம் ஒன்றுமே இல்லை.

காங்கிரஸ் கட்சி முக்கியப் பிரமுகர்களோடு உரையாடியபோது அனைவரும் வாசனை முடிவை ஏகமனதாக வரவேற்கிறார்கள். இன்று ஞானதேசிகனுக்கு பதிலாக மேலிடத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறந்த அரசியல் ஞானம் படைத்தவர். பேச்சாளர். தமிழகம் அறிந்த முக்கிய பிரமுகர் என்றாலும் கூட அவரால் எந்த வகையிலும் தமிழ்நாடு காங்கிரசை உயிர்ப்பிக்க முடியாது என்பது தான் அரசியல் நோக்கர்களின் பார்வை.

மாநில பிரச்சினைகளுக்கே கட்சிகள் அதிக முக்கியத்துவம் தரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி மாநில உரிமைகளை மதிக்கவில்லை என்பது நீண்ட நெடுங்காலமாக புகைந்து கொண்டிருந்த நெருப்புதான், எனவேதான் வாசனின் தனிக்கட்சியை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர். அனைத்து ஊடகங்களும் வரவேற்றிருக்கின்றன.

விலைவாசி உயர்வுதான் நாட்டின் தலையாய பிரச்சினையாக இருந்திருக்குமானால் அகில இந்திய அளவில் ஆளும் கட்சியாக வந்திருக்கவேண்டிய கட்சி மார்க்சிஸ்டு கட்சிதான். ஆனால் தமிழகத்தில் அவர்கள் திசைதெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் திசைதெரியாமல்தான் அவர்கள் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். கடந்த 2012-13 ஆகிய இரு ஆண்டுகளில் டெல்லி மாநிலத்தில் மொத்தமே 32 பேர் தான் புதிதாக இக்கட்சியில் சேர்ந்துள்ளார்கள். அகில இந்திய அளவில் 2௦,௦௦௦த்திற்கும் குறைவானவர்கள்தான் இக்கட்சியில் சேர்ந்துள்ளனர். ஆனால் கட்சியை விட்டு சென்றவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது. எனவே தான் ஒற்றை இழக்க என்னோடு இன்று நாடாளுமன்றத்தில் அக்கட்சி வளம் வருகிறது. இந்த நிலையில் தமிழகக் கிளையைப் பற்றி கவலைப்படும் எண்ணத்தில் மத்திய கம்யூனிஷ்டுகள் இல்லை.

தா.பாண்டியன் போன்றவர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நல்லகண்ணு போன்றவர்களால் இளைஞர்களை ஈர்க்க முடியவில்லை. பா.ஜ.கவும் வேண்டாம், காங்கிரஷும் வேண்டாம், ஜாதி கட்சிகளும் வேண்டாம் என்று நினைக்கும் அவர்களுக்கு எந்த திசையில் செல்வது என்பது முடிவு செய்ப்பட முடியாத ஒரு பிரச்சினையாத்தான் இருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக இவர்களை கழற்றி விட்டது போல எல்லா கட்சிகளும் இவர்களை கழற்றிவிடும் நிலையில்தான் இடதுசாரி கட்சிகள் இருக்கின்றன. ஆக, தமிழக அரசியலில் இடதுசாரிகளின் பங்கு என்பது பூஜ்யத்தை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சனைதான் தமிழகத்தின் தலையாய பிரச்சினை என தமிழக மக்கள் முடிவு செய்திருந்தால் இன்று ஆட்சிக் கட்டிலில் இருந்திருக்கவேண்டிய கட்சி மதிமுக. தமிழகம் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இன்று ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் வைகோ. ஆனால் தமிழகம் அவரது உழைப்பை மதிக்கும் அளவுக்கு அவரது கட்சியை மதிக்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஊடகங்களால் பபரப்பாக பேசப்பட்டாலும், வாக்காளர்கள் மனதை ஆட்டுவிக்கும் பிரச்சினையாக அது எப்போதுமே உருவானதில்லை. எனவேதான் நாடாளுமன்ற தோல்விக்குப் பிறகு வைகோவின் கட்சி அடுத்து என்ன செய்வது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

பாஜகவோடு கூட்டணியா, கூட்டணி இல்லையா? என்பதில் தெளிவில்லை. திமுகவோடு நெருங்கி உறவாடலாமா என்றால் வைகோவே விரும்பினாலும் கூட இதர கட்சியினர் இதை சுத்தமாக ஆதரிக்கவில்லை. அன்புமணி ராமதாஸ் இல்லத் திருமணத்தில் வைகோவும் ஸ்டாலினும் சந்தித்த பிறகு எழுந்த பரபரப்புகள் கருணாநிதியின் வரவேற்பு, வைகோவின் தாய்வீட்டுப் பாசம் எல்லாமே 24 மணிநேரத்திற்குள் அடங்கிவிட்டன. காரணம், மதிமுக தொண்டர்கள் எந்த நிலையிலும் திமுகவுடன் செல்வதை விரும்பவில்லை என்பதை தலைமைக்கு தெளிவாக தெரியப் படுத்தியதுதான். இந்நிலையில் மதிமுகவும், திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் போகமுடியாத நிலையில் திசை தடுமாறிதான் நிற்கிறது. பாமகவுக்கும் மாற்று திசையில் பயணிக்க ஆசை இருக்கிறது. ஆளும் கட்சி கூட்டணியில் எம்பியான அன்புமணி இதை விரும்பவில்லை. ராமதாசின் வலியுறுத்தல்கள் அன்புமணியிடம் எடுபடவில்லை என்றுதான் விஷயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் மாறாத நிலை எடுத்திருப்பவர் விஜயகாந்த் மட்டுமே. அவருக்குத் தனது தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. தன்னை முதலமைச்சர் போட்டியாளர் எனக் காட்டிகொள்ள அவர் விரும்புகிறார். மதிமுகவின் தடுமாற்றம், பாமகவின் தடுமாற்றம் இவையெல்லாம் தனக்கு சாதகமாக அமையவேண்டும் என விரும்புவதாகவும் தெரிகிறது. தேமுதிக, பாஜக இரண்டு கட்சிகள் போதுமானது என்பது அவரது அபிப்பிராயமாக சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவுடனான உறவில் மாற்றம் இல்லை என்ற விஜயகாந்தின் தீர்மானம் அவரது அரசியல் சாமர்த்தியத்தைதான் நன்கு வெளிப்படுத்துகிறது.

பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆன பிறகு தமிழகத்தில் நிர்வாகம் ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி பலர் மத்தியில் தொடர்ந்துகொண்டு இருந்தது. பால் விலை ஏற்றத்தின் போது நிர்வாகம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறது, செயல்படத்தான் இல்லை என்பது பலருக்கு புரிந்துவிட்டது. முதல்வர் மட்டும்தான் நிழல் முதல்வர் என்ற நிலையைத் தாண்டி, தமிழகத்தில் தலைமைச் செயலாளர், நிழல் தலைமைச் செயலாளர்- டிஜிபியும் நிழல் டிஜிபியும் என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. வேடிக்கையாகச் சொல்வதென்றால் டாஷ்மாக்கின் ரெண்டு ரெண்டாக தெரியும் நிலை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி என எல்லா பதவிகளிலும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் கூட நிர்வாகத்தின் கோளாறுகள் விமர்சிக்கப்படுவதில்லை. உண்மையச் சொல்வதென்றால் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு எதிர்ப்பு என்ற ஒரு எண்ணமே எழாத ஒரு அரசை அதிமுகவால் கொடுக்க முடிந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் ஆகட்டும், அதிமுகவின் தில்லுமுல்லுகளுக்கு அப்பாற்பட்டும் அக்கட்சி பெற்றிருக்கும் ஓட்டு இதர கட்சிகளால் நெருங்க முடியாததாகத்தான் இருக்கிறது. இன்றைய நிலையில் தேர்தல் வந்தால்கூட அதிமுகவின் வெற்றி வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமாக இருப்பதாத்தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாகவே தீவிர மோடி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் 'இந்தியா டுடே' வார ஏடு தமிழகம்தான் இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் என்று தேர்ந்தேடுத்திருப்பது மோடியா? லேடியா? கேள்விக்கு இன்னமும் லேடியின் வாய்ஸ் குறையாமல் இருக்கிறது என்பதைத்தான் நிரூபித்திருக்கிறது. எதிகட்சிகளின் கூட்டணி என்பது கொள்கையை மையமாக வைத்து என்ற நிலை தாண்டி அதிமுக எதிர்ப்பு நிலை என்று உருவானால் கூட அதிமுக அவற்றைவிட பலம் பொருந்தியதாகதான் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கு மாற்று என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.

பீகாரின் நிதீஷ் குமாரின் தலைமையிலான மாநில கட்சி மோடி அலையில் காணாமல் போனது, ஹரியானாவில் சௌதாலாவின் மாநிலக் கட்சி மோடி அலையில் காணாமல் போனது. சமீபத்திய மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நீண்டகால கூட்டணியாக இருந்த சிவசேனா மோடி அலையில் காணாமல் போனது. பஞ்சாபில் விரைவில் அகாளிதலத்துக்கு அந்த நிலை வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. ஜம்முகாஷ்மீரில் கூட மோடி அலைமாநில கட்சிகளை ஓராம் தள்ளி பாஜகவுக்கு வெற்றிகொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் மோடி அலை ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வி டெல்லியில் இருக்கும் அரசியல் நோக்கர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் எழுத்துள்ளது.

புதிய தலைவரின் கீழ் தமிழக பாஜக அணிவகுக்க தொடங்கி இருப்பது கட்சியினரிடம் மிகுந்த உற்சாகம் கொடுத்திருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றபோது ஜெயலலிதா, கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை வாழ்த்தியது, பாஜக அசைக்க முடியாத் ஒரு இடத்தை தமிழகத்தில் பெற்று விட்டது என்பதையும் அரசியல் பாரம்பரியம் மிக்க ஒரு தலைவர் . தமிழிசை சௌந்தரராஜன் என்பதையும் நிரூபித்திருக்கிறது. ஆனால் தொண்டர்களிடையே குழப்பம் இல்லை என்றாலும் கூட குழப்பங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இல்லை.

மாநில பாஜகவும் சுப்பிரமணியன் சுவாமியும் ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிரார்கள். பாஜக எதிர்ப்பு ஊடகங்களுக்கு பாஜகவை கொக்கிப் பிடி போட இதுவே வசதியாக இருக்கிறது. அந்த ஊடகங்கள் பாஜக தலைமையை தமிழகத்தின் நலம் விரும்பும் தலைமையமாகக் காண்பிக்க இன்றைய தலைவர்களை சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரானவர்களாக காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால் கொள்கை சார்ந்த விஷயங்களில் சுப்பிரமணியன் சுவாமி மாநிலத்தை கலந்து கொள்ளாமல் பேசுவது நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. மாநில கிளைக்கு மதிப்பளிக்கும் மத்திய பாஜக இதை சற்று முக்கியத்துவம் கருதி கையாள்வது நல்லது. அதே வேளையில் சுப்பிரமணியன் சுவாமியின் எந்த கூற்றும் நேரடியாக தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்பதை பெரும்பாலானவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.ஊடகத்துக்கும் மாற்றுக்கட்சியினருக்கும் தீனிபோடும் விஷயமாக அவை மாறக்கூடாது என்ற தமிழக பாஜகவின் கோரிக்கை நியாயமே.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி அலை தமிழகத்திலும் விரைந்து பரவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 9 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இருப்பதாக அக்கட்சி அறிவித்திருப்பது மிகவும் வரவேறக்கத்தக்கது. ஆனால் அந்த தொண்டர்கள் எந்த அளவுக்கு களத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களுக்கு எந்த மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு எந்தெந்த மாதிரி வேலை பகிர்ந்தளிக்க வேண்டும்? இதையெல்லாம் பற்றி மாநில பாஜக ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இன்றுள்ள நிலையில் அதிமுகவுக்கு ஒரே மாற்று பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். 2௦16 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையை இப்பொழுதே பாஜக தொடங்க வேண்டும். மாநில அரசின் பெரும்பான்மை விரோத போக்கை மக்களுக்கு எடுத்துச் சென்றாலே அது பாஜகவுக்கு மிகுந்த பலன் தரும். தேவிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்த் தடை. பல 'கூர் உணர்வுள்ள' பகுதிகளில் அரசியல் கட்சியான பாஜகவுக்கே கூட்டம் நடத்தத் தடை, தேவையற்ற சிறுபான்மை ஆதரவு ஆகிய விஷயங்களில் – மேற்குவங்கத்தை ஒரு பயங்கரவாத கூடாரமாக மம்தா பானர்ஜி உருவாக்கியது போல தமிழகத்த்தை ஜெயலலிதா உருவாக்கிக் கொண்டிருக்கிறாரே என்ற எண்ணத்தை உருவாகியிருக்கிறது. சமுதாயம் பிளவுபடுத்த்ப்படுவது நல்லதல்ல எண்ணம் மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும்.

தூக்கு தண்டனை கைதிகளான 5 மீனவர்களை காப்பாற்றும் பாஜகவின் முனைப்பு அனைவராலும் வரவேற்கப்படுகிறது. இலங்கை பிரச்சனையில் பாஜகவின் நிலை கூட பரவலாக சரியாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மத்தியில் பாஜகவின் ஆளுமை வேகம் மக்களை அபரிமிதமாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் பாஜக செய்ய வேண்டியதெல்லாம் அதிமுகாவின் பொது ஜன விரோத பொருளாதார 'வளர்ச்சி' சமூக நல்லிணக்கம் ஆகிய விஷயங்களையும் கையில் எடுத்துக்கொண்டு திட்டமிட்டு வேலையில் இறங்கினாலே மோடி அலை 2016ல் லேடி அலையிலிருந்து தமிழகத்தை மீட்டு பாஜகவிடம் ஒப்படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இதற்கான அடித்தளத்தை அமைக்கவேண்டிய பொறுப்பு இன்றய பாஜகவின் தலைவர்களிடம்தான் இருக்கிறது.

நன்றி : நம்பி நாராயணன்

விஜய பாரதம்

Leave a Reply