தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் விடுதலைக்காக இந்திய அரசாங்கம் அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டது. அதேநேரத்தில் அவர்களின் விடுதலைக்காக அரசு ரீதியான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து கொண்டு இருந்தன. நம்முடைய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அதிபருடன் நேரடியாக பேசினார். இந்த இடையறாத முயற்சியால் தமிழகத்தைசேர்ந்த மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

இது வரை இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்திராத மாபெரும் சரித்திரநிகழ்வு ஒன்றை பிரதமர் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். தூக்குக் கயிறு வரை சென்ற 5 தமிழ் மீனவர்களை காப்பாற்றியது மட்டும்மல்லாது இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களின் உயிர்களையும் காப்பாற்றிய பெருமை நம்முடைய பிரதமரையே சாரும். நரேந்திர மோடி இந்தவிஷயத்தில் முழுகவனம் கொடுத்து எந்த வகையான பிரதிபலனும் எதிர்பாராது இந்தியர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரேநோக்கில் செயல்பட்டு வெற்றி பெற்றமைக்காக தமிழகமக்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு நமது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தின் அனைத்து மக்களும் நரேந்திரமோடிக்கு நன்றிகடன் பட்டிருக்கிறோம். இன்று 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்திமூலம் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒருதீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உலக தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களில் எழுந்துள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply