சென்னை உரத் தொழிற்ச் சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனிடம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த் குமார் உறுதியளித்தார்.

இது தொடர்பாக தில்லியில் "தினமணி' நிருபரிடம் இல.கணேசன் கூறியதாவது:

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை உரத்தொழிற்சாலை நாப்தா மூலம் இயங்கி வருவதால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி, அதை இயற்கை எரி வாயு மூலமாக இயங்க செய்வதற்கான திட்டம் முன் வைக்கப்பட்டது.

இதற்கு காலஅவசாகம் அதிகமாகும் எனக்கருதி, தொழிற் சாலையில் உற்பத்தியை நிறுத்திவைக்கக் கூட அரசு முடிவெடுத்தது. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற உடனேயே உரத் தொழிற் சாலையின் அதிகாரிகளும், தொழிலாளர்களும் என்னை அணுகி இந்தப்பிரச்னை குறித்துப் பேசினர்.

பிரச்னையின் நியாயத்தை உணர்ந்து மத்திய உரத்துறை அமைச்சர் அனந்த்குமாரையும், பின்னர் நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்து தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். ஆனாலும் கூட தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவது சந்தேகம் என எண்ணும் வகையில் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவாகக் கடிதம் எழுதினேன். இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க் கிழமை மாலை உரத்துறை அமைச்சர் அனந்த் குமாரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினேன். இந்த பிரச்னையை மிகவும் கனிவோடு பரிசீலிப்பதாகவும், நாப்தாவின் மீது விதிக்கப்பட்டுள்ள வாட்வரியை விலக்கி கொள்வதன் மூலம் நஷ்டத்தை குறைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு, தொழிற் சாலையை தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக, சுமார் 2 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெறும். மேலும், தமிழகத்தின் விவசாயிகள் கூட நியாயமான விலையில் உரங்களைப் பெறுவர். அமைச்சர் அனந்த் குமாரை சென்னைக்கு வருமாறும், எம்எஃப்எல் தொழிலாளர்களை நேரில் சந்திக்குமாறும் அழைப்புவிடுத்தேன். அவரும் வருவதாக உறுதியளித்துள்ளார் என்றார் இல.கணேசன்.

Leave a Reply