மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசில் சிவசேனையை சேர்ப்பது தொடர்பாக நடை பெற்றுவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது: பாஜகவுக்கு சிவசேனை எப்போதும் நட்புக்கட்சிதான். எதிர்காலத்திலும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என நம்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசில் சேருவது தொடர்பாக சிவசேனையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதுதவிர வேறு எந்தத் தகவல்களையும் தெரிவிக்க இயலாது.

ஆர்.எஸ்.எஸ். மத்தியஸ்தம் செய்யவில்லை: பாஜகவுக்கும், சிவசேனைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்தியஸ்தராகச் செயல்படவில்லை. அரசியலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலையிடுவதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவும், சிவசேனையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எனவே இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மகாராஷ்டிர பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சி, தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஆதரவை நாங்கள் ஏற்கவும் இல்லை; நிராகரிக்கவும் இல்லை.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக அரசு மீது நடைபெற்ற வாக்கெடுப்புக்குப் பிறகு, என் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்று, எனது 22 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரும் என்மீது இந்த அளவுக்கு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தது கிடையாது.

தில்லி முதல்வர் பதவியை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தது போன்று, என்னாலும் பதவியை ராஜிநாமா செய்ய முடியும். ஆனால் அவரைப் போல் பொறுப்புகளை தட்டிக்கழிக்க நான் விரும்பவில்லை. எனது நடவடிக்கைகளைக் கொண்டு என்னை நீங்கள் மதிப்பிடுங்கள் என்றார் அவர்.

Leave a Reply