தீவிரவாதிகளுக்கு நிதி உதவியும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலமும் பாகிஸ்தான் தருகிறது, தாவூத் இந்தியாவில் மிகத்தீவிரமாக தேடப்படும் குற்றவாளி. இப்போது அவர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கிறார் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் .

டெல்லியில் நடந்த ஒரு விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகள் உள்நாட்டில் வளர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து உதவி கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தான் முழு உதவியும் அளிக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால் ஐ.எஸ்.ஐ. பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் தானே. தீவிரவாதத்துக்கு ஐ.எஸ்.ஐ. தான் உதவிகளை வழங்குகிறது.

2008 மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அந்நாட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு பாகிஸ்தான் எந்த உதவியும் செய்யவில்லை. அந்த வழக்கை கைவிட முயற்சித்து வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்தபோது, தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கும்படி நமது பிரதமர் அவரிடம் கூறினார். அதற்காக நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இதற்காக தூதரக உறவு தொடர்பான அழுத்தத்தையும் கொடுக்க முயற்சித்து வருகிறோம். தாவூத் இந்தியாவில் மிகத்தீவிரமாக தேடப்படும் குற்றவாளி. இப்போது அவர் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கிறார்.

தாவூதை பிடிக்க எங்களுக்கு காலம் வேண்டும். சில தந்திரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறோம். அதனால் பாகிஸ்தான் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தாவூதை எங்களிடம் ஒப்படைக்கும்.

பாகிஸ்தானுடன் மட்டுமல்ல, மற்ற அண்டை நாடுகள், ஏன் உலக நாடுகள் அனைத்துடனும் இந்தியா நட்புறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. இந்தியா தரப்பிலும், பாகிஸ்தான் தரப்பிலும் கூட பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் அவர்கள் தரப்பில் தயக்கம் இருக்கிறது. ஆனால் விரைவில் இதில் சில அதிசயங்கள் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவுடன் பேசுவதற்கு முன்னர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேசவேண்டும் என்று பாகிஸ்தான் தனது நிலையில் உறுதியாக இருந்தால், நாங்களும் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.

உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள், வெளிநாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள், வெளிநாட்டு உதவிபெறுவோரிடம் இருந்து பாதுகாப்பு பிரச்சினைகள் எல்லாம் இங்கு இருக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்வதில் எங்களுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை.

மொத்த அரசும் பிரதமரால் தான் நடத்தப்படுகிறது. நாங்கள் அவரது சகாக்களாக பணியாற்றுகிறோம். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிரதமர் அனைத்து மந்திரிகளுக்கும் முழு சுதந்திரம் அளித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். வெளியில் இருந்து எங்களை இயக்கவில்லை. ஆனால் பிரதமரோ, நானோ அந்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

சட்டசபை தேர்தலில் நல்ல நிர்வாகம், வளர்ச்சிப்பணிகள் போன்றவற்றை தான் பேசவேண்டும். ஆனால் காஷ்மீரில் தனி அந்தஸ்து வழங்கும் பிரச்சினையை வாக்காளர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக எங்களது எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. ஆனால் ஜனநாயகத்தில் எந்த ஒரு பிரச்சினைக்குமே விவாதம் தேவைப்படுகிறது என்றார்.

Leave a Reply