தமிழக பா.ஜ.க.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- டெல்லியில், சோனியாகாந்தி முன்னிலையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நடிகை குஷ்பு இன்று அரசியலுக்கு வரவில்லை. இதற்கு முன்னர் வேறு கட்சிகளில் இருந்தார். இன்று காங்கிரஸ் கட்சிக்கு போய் இருக்கிறார். முன்பு அந்த கட்சி பிடித்து இருந்தது. இன்று இந்த கட்சி பிடித்து இருக்கிறது. அன்று அந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து இருக்கிறது. இன்று இந்த கட்சியின் கொள்கைகள் பிடித்து இருக்கிறது. அன்று அங்குள்ள தலைவர்கள் பிடித்திருந்தார்கள். இன்று அந்த தலைவர்கள் பிடிக்கவில்லை, இந்த தலைவர்களை பிடித்து இருக்கிறது. அதனால் அவர் கட்சி மாறி இருக்கிறார்.

குஷ்பு கட்சி மாறியதால் தமிழகத்தில் காட்சி மாறவில்லை. எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு, காமராஜரை கூட மறந்த காங்கிரஸ் கட்சிக்கு இன்று குஷ்பு தேவைப்படுகிறார். இதனால் பா.ஜ.க.வுக்கு கிஞ்சித்தும் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

கேள்வி:- நடிகை குஷ்பு காங்கிரசில் சேர்ந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழகத்தில் பா.ஜ.க. எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளாரே?

பதில்:- நடிகை குஷ்பு சேர்ந்ததால், அவருக்கு கண்கள் மறைக்கப்பட்டு விட்டதா, காட்சிகள் மறைக்கப்பட்டு விட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், நாங்கள் சொல்லவில்லை, லயோலா கல்லூரி சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் 9 சதவீதம் பலத்தை பெற்று பா.ஜ.க. பரவலாக வளர்ந்து வரும் கட்சியாக தென்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கூட்டணி அமைத்தும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை என்று குஷ்பு சொல்லி இருக்கிறார். ஆனால் ஒரு மத்திய மந்திரியை பெறும் அளவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்று இருக்கிறோம். எங்கள் கூட்டணி புதுச்சேரி உள்பட 3 இடங்களை பெற்று உள்ளது. இன்று அவர் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியுமா?.

ஏற்கனவே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்து நிற்கும் காங்கிரஸ் எப்படி பலம் உள்ளதாக நினைக்கிறார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் இவர் சேர்ந்திருக்கும் காங்கிரஸ் ஒதுங்கியது. பா.ஜ.க. போட்டி போட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இவர் சேர்ந்திருக்கும் காங்கிரசில் கூட்டி, கழித்து, உடைத்து, பிரிந்து வாசனிடம் போய் சேர்ந்தவர்கள் போக மீதி எவ்வளவு பேர் தங்கி இருக்கிறார்கள் என்று தெரியுமா?. அப்படியே தங்கி இருப்பவர்கள் எந்தெந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்று தெரியுமா?.

இனி, இவர் எந்த கோஷ்டியில் சேரலாம் என்று கவலைப்பட வேண்டிய நிலையும் வரும். குஷ்புவுக்கு இஷ்டம் இருந்தால் ஒரு கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும். அதற்காக பா.ஜ.க.வை விமர்சிப்பதை பொறுத்து கொள்ள முடியாது. தொண்டர்கள் பலத்தாலும், கொள்கை பலத்தாலும் இன்று பலம் பெற்று கொண்டு இருக்கிறோம்.

2 வாரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். சிலர் சேரவில்லை என்று எங்களுக்கு கவலை இல்லை. லட்சோப லட்ச இளைஞர்கள் சேர்ந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஷ்புவை நாங்கள் ஒருபோதும் அணுகவில்லை. அணுகியதாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

Leave a Reply