பயங்கர வாதிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு, தங்கள் வாக்குகளால் ஜம்முகாஷ்மீர் மக்கள் பதிலளித்துள்ளார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாறு படைத்தது. .

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் வெள்ளிக் கிழமை அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக, ஜம்முகாஷ்மீர் மாநிலம் வளர்ச்சியடையாமல் தேக்கமடைந்துள்ளது. இங்கு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும்தான் இதற்கு காரணம். மக்களின் நலனுக்காக, வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தை கொள்ளையடித்து அவர்கள் ஊழல் செய்ததால் தான் இந்த மாநிலம் இன்னமும் மேம்படாமல் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக நான் இரண்டாவது முறையாக இங்குவருகிறேன்.

முதல் கட்டத்தேர்தலில் 71.28 சதவீதம் வாக்குகள் பதிவானது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலை புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள் விடுத்த அழைப்பு, கடும்குளிர் ஆகியவற்றைப் புறக்கணித்து ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு அதிகரித்ததன் மூலம் ஜனநாயகத்தை மக்கள் வெற்றியடைய செய்துள்ளனர்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி, தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ததன் மூலம் துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு அவர்கள் பதிலளித்துள்ளனர். துப்பாக்கிகள், குண்டுகளின் மூலம் மக்களைக்கொல்லும் பயங்கரவாதிகள், ஜம்முகாஷ்மீரில் ஜனநாயகம் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஜம்முகாஷ்மீரின் எதிர் காலம் ஜனநாயகத்தில்தான் உள்ளது என்பதை வாக்குப்பதிவின் மூலம் மக்கள் தெளிவாகத் தெரிவித்து விட்டனர். இதற்காக இந்தமாநில மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட பாராட்டல்ல. நாட்டின் 125 கோடி மக்களும் உங்களை (ஜம்மு – காஷ்மீர் மக்கள்) பாராட்டுகின்றனர். உங்களை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது.

ஜம்மு – காஷ்மீர் தேர்தல் வாக்குப் பதிவு குறித்த செய்திகள் உலகம்முழுவதும் சென்றடைந்துள்ளன. உங்கள் மனதில் என்ன உள்ளது என்பது இன்று உலக நாடுகளுக்குத் தெரிந்துவிட்டது.

ஜம்மு – காஷ்மீரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற முழுநம்பிக்கை எனக்குள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags:

Leave a Reply