விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, கோரிக்கைகளை வைத்து கூட்டணி கட்சியாக இருப்பதனால் அதற்கான பிரச்சினைகளையும் சரிசெய்து கொள்ள முடியும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் பேசினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கனிமவள முறைகேடு குறித்த விசாரணையின் போது சகாயம் குழுவிற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கனிம வளத்தை சூறையாடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வருகிற 4–ந்தேதி கூடும் சட்டமன்றம் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்கவேண்டும். ஜெயலலிதாவை துதிபாடும் மன்றமாக இருக்கக்கூடாது.

எச்.ராஜா சொன்ன கருத்துக்களுக்காக அவரதுவீட்டினை மதிமுக.வினர் முற்றுகையிட சென்றிருக்கிறார்கள். இது ஒரு அரசியல் நிகழ்வாக கருதவில்லை. வருந்தத்தக்க நிகழ்வாகத்தான் நான் கருதுகிறேன்.

தமிழகத்தில் ஒரு மாற்றுசக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியை அமைப்பதற்காகதான் எல்லோரும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எந்த விதத்திலும் பிரிந்துவிடவில்லை. அதற்கான கால நேரமும் வரவில்லை. அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த அணி தொடர்ந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றுசக்தியாக உருவெடுக்க முடியும் . அதனால் தான் வைகோவிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன். அது என்னவென்றால் விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, கோரிக்கைகளை வைத்து கூட்டணி கட்சியாக இருப்பதனால் அதற்கான பிரச்சினைகளையும் சரிசெய்து கொள்ள முடியும் என்றேன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் தேவை. அதற்காக தமிழகத்தில் ஒருகோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply