இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா அவரது மனைவி ஜெயந்தியுடன், நான்கு நாள் அரசு முறைப்பயணமாக ஞாயிற்றுக் கிழமை இந்தியா வந்தார். இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணம் இதுவாகும்.

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை வந்தடைந்த இலங்கை அதிபர் சிறீசேனா உள்ளிட்ட அந்நாட்டு பிரதிநிகளை, மத்திய சாலை போக்கு வரத்து, கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு சார்பில் வரவேற்றார்.

இந்தியாவுக்கு வந்துள்ள சிறீசேனா, திங்கள் கிழமை (பிப்ரவரி 16) காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு அரசுசார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று காலை 11.05 மணிக்கு ஹோட்டல் ஐடிசி மெளரியாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்திக்கிறார்.

பிரதமருடன் சந்திப்பு: அதையடுத்து, நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடியை அதிபர் சிறீசேனா சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இருநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இருநாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply