அணு மின்சாரம் உற்பத்திசெய்ய தேவையான மூலப் பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு சப்ளை செய்ய கனடா ஒப்புக்கொண்டது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இறுதியாக கனடாவுக்குச் சென்றார்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அணு மின்சாரம் உற்பத்திசெய்ய தேவையான மூலப்பொருளான யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா சப்ளை செய்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

யுரேனியம் தொடர்பான ஒப்பந்தத்தின் படி, அடுத்த 5 ஆண்டுகளில், கனடா 280 மில்லியன் டாலர் மதிப்புள்ள யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கும்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் , "இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவது, இந்தியாவின் மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது" என்றார்.

இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான மூலப் பொருட்களை விற்பனை செய்வதை 1976 ஆம் கனடா தடை செய்தது. அதன்பின், 2012-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதிசெய்ய வகை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன் படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என்பதை முடிவுசெய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் 22 அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. அடுத்த 20 மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply