டெல்லியில் கவர்னர் நஜீப்ஜங்குக்கும், முதல்– அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு நிர்வாகத்தை நடத்தும் உத்தரவுகளை பிறப்பிப்பது யார் என்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல்வெடித்துள்ளது.

சமீபத்தில் டெல்லி தலைமைசெயலாளர் சர்மா 2 வாரகால விடுப்பில் அமெரிக்கா சென்றதால், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகுந்தலா கேம்லினை, தலைமை செயலாளர் பொறுப்பில் கவர்னர் நியமித்தார். இதற்கு முதல்– மந்திரி கெஜ்ரிவால் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.

தலைமை செயலாளரை நியமனம்செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று கூறிய அவர், சகுந்தலா கேம்லினை பதவி நீக்கம்செய்து அறிவித்தார். அதுமட்டுமின்றி சகுந்தலா நியமன உத்தரவில் கையெழுத்திட்ட டெல்லி மாநில அரசின் முதன்மை செயலாளரையும் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்துப் பேசினார். என்றாலும் ''யாருக்கு அதிகாரம் உள்ளது?'' என்பதில் சுமூக தீர்வு ஏற்பட வில்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தமது ஒப்புதல் இல்லாமல் டெல்லி அரசுபிறப்பித்த அனைத்து உயர் அதிகாரிகள் பணியிடமாற்றல், நியமன உத்தரவுகளை கவர்னர் நஜீப்ஜங் கடந்த புதன் கிழமை அதிரடியாக வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில் அவர், ''டெல்லியில் சுதந்திரமாக ஆட்சிநடத்த ஒத்துழைப்பு தாருங்கள்'' என்று கூறியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி அந்த கடிதம் பற்றி கண்டு கொள்ளவில்லை.

மேலும் கெஜ்ரிவால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தனக்கு அதிகாரம் இல்லை என்று கெஜ்ரிவால் மக்களை திசைதிருப்புவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

இந்நிலையில் யூனியன் பிரதேச அரசில் கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்–மந்திரிக்கு அதிகாரம் உள்ளதா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே முக்கிய பணிகளில் கவர்னருக்கே முழு அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் நியமனம், பொது உத்தரவு, போலீஸ் மற்றும் நிலம் மீது முடிவு எடுக்கும் பொறுப்பும், அதிகாரமும் கவர்னருக்கே உள்ளது.

அதிகாரிகளை நியமனம் செய்யும்போது, அது தொடர்பாக கவர்னர், முதல்– மந்திரியுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால் முதல்– மந்திரியிடம் கவர்னர் கருத்துகேட்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கம் அரசிதழிலும் உடனடியாக வெளியிடப்பட்டது.

Leave a Reply