பயங்கரவாதத்தை சமாளிப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத்தூதராக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எகிப்து சென்று அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசியை சந்தித்துப்பேசினார்.

தில்லியில், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள மூன்றாவது இந்திய-ஆப்பிரிக்கமன்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு சிசிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இருதலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பரஸ்பர நன்மை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு எகிப்து ஆர்வத்துடன் உள்ளதாக கூறியதோடு, அரசியல் மற்றும் பொருளதார முன்னேற்றத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டினார்.

பயங்கரவாதத்தை சமாளிப்பதில் இந்தியாவின் அனுபவத்தில் கற்றுக் கொள்ள எகிப்து ஆர்வத்துடன் இருப்பதாகவும் அதிபர் சிசி தெரிவித்தார். இதை நக்வி வரவேற்றார்.

அதிபரிடம் நக்வி கூறுகையில், எகிப்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். பயங்கர வாதத்தைச் சமாளிப்பதில் எகிப்தின் முயற்சிகளுக்கு துணைநிற்போம் என்று அவர் உறுதியளித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் சிசியை நக்வி சந்தித்த போது எகிப்துக்கான இந்திய தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா உடன் இருந்தார். இந்த சந்திப்புகுறித்து அதிபரின் செய்தித்தொடர்பாளர் அலா யூசெஃப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்லாண்டு காலமாக, இந்தியா-எகிப்து உள்ளிட்ட இரண்டு நாடுகளும் சிறப்பான முறையில் கடைபிடித்துவரும் பரஸ்பர உறவுகுறித்து அதிபர் பெருமிதம் தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார துறைகளில் இந்தியா எட்டியுள்ள வளர்ச்சி தான் அந்நாட்டை சர்வதேசளவில் உருவெடுத்துவரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாக அதை மாற்றியுள்ளது என்றார் அலா யூசெஃப்.
முக்தார் அப்பாஸ்நக்வி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில், அடுத்ததாக இந்தியாவில் இருந்து மூத்த அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக எகிப்தில் பயணம்மேற்கொள்ள உள்ளனர்'' என்றார்.

Leave a Reply