இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை உருவாக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது.

22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, அண்டை நாடுகளுடன் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்து வதற்காக, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நேபாளம், பூடான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுடன் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்து வதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தாகின.

இதை தொடர்ந்து, சாலை போக்குவரத்து தொடர்பாக நேற்று நடந்த மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கப்பல் ,சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின்கட்காரி கூறியதாவது:

அண்டை நாடுகளுடன், வர்த்தக ரீதியான உறவை பலப் படுத்த, போக்குவரத்து இணைப்புவசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. வங்க தேசம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்கு வரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழகத்தின், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலையமைக்கும் திட்டம் உள்ளது; இதற்காக, 22,000 கோடி அளிக்க, ஆசிய வளர்ச்சிவங்கி முன் வந்துள்ளது. இதுதொடர்பாக, ஆசிய வளர்ச்சிவங்கியின் துணைத் தலைவருடன் ஏற்கனவே பேச்சு நடத்தப் பட்டுள்ளது.

இந்த சாலை, 22 கி.மீ., துாரத்துக்கு அமையலாம். கடலுக்குமேல் பாலம் அமைத்தும், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும், இந்தசாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறைகள் மூலமாக, 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆறுலட்சம் கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன. இந்த இலக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டப்படும்.சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில், ஏற்கனவே, ஒருலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை திட்டங்களை நிறைவேற்ற, அரசுக்கு, நிதி ஒரு பிரச்னை இல்லை. வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக, 112 திட்டங்கள் அரசு நிதியில் நிறைவேற்றப் பட்டுள்ளன. பல வெளிநாட்டு நிறுவனங்கள், 0.50 சதவீத வட்டியில் தாராளமாக நிதி யுதவி அளிக்க முன் வந்துள்ளன. பட்ஜெட் ஒதுக்கீடு, வரிவிலக்கு அளிக்கப்பட்ட பத்திரங்கள், சுங்ககட்டணம் ஆகியவற்றின் மூலமாக அடுத்த, 15 ஆண்டுகளில், 1.20 லட்சம் கோடி ரூபாயை திரட்ட முடியும்.

மேலும் தற்போது, ராமேஸ் வரத்தில் இருந்து இலங்கைக்கு, கடல்வழியாக சாலை அமைக்கும் திட்டத்தை துவக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply