தலைநகர் டெல்லியில் பரவலாக பேசப்படும் ஒருவிஷயம் இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரே எதிர்க்கட்சிகளின் அமளியால் வீணாய் போய்விடுமா என்பது பற்றித்தான். 11 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. 8 புதியமசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனினும் திட்டமிட்டபடி மசோதாக்கள் நிறைவே ற்றப்படுமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

பல்வேறு அரசியல் பரபரப்புகள் டெல்லியில் சூழ்ந்துள்ள நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ம.பி எம்.பி. துலிப் சிங் புரியா மறைவுக்கு இரங்கல்தெரிவித்து மக்களவை முதல் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் சப்தமிட்டதைத் தவிர மாநிலங்களவையில் வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

லலித்மோடி விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன. மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், எதிர்க் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பிரதமர் நரேந்திரமோடி இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரின.

பிற்பகலில், அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் அறிக்கை அளிக்க தயாரான நிலையில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜேவின் ராஜினாமாக்களைத் தவிர வேறு எதனையும் ஏற்க போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து விட்டது. இதன் காரணமாக நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்குவது இதுமுதல் முறையல்ல. இது கடைசி முறையாக இருக்குமா என்பதும் சந்தேகமே 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்காலக் கூட்டத்தொடருக்கு 162 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலவு ஆவதாக தெரிகிறது.

அதே நேரத்தில் 1951 ஆம் ஆண்டில் ஒருநிமிடத்திற்கு 100 ரூபாய் மட்டுமே செலவானது. அப்போது அவர்கள், முழு நேரத்தையும் தேசியப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செலவழித்தனர். 2006ம் ஆண்டில் நாடாளுமன்ற செலவு ஒருநிமிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இப்போது அது நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

கடந்த நாடாளுமன்றம், அதாவது 15வது நாடாளுமன்றம், ஒத்திவைப்பு மற்றும் எதிர்க் கட்சிகளின் அமளியால் 28 விழுக்காடு நேரம் வீணாக கழிந்துள்ளது. 14வது நாடாளுமன்றத்தில் 22 விழுக்காடு நேரம் வீணாகிஇருக்கிறது. 11 வது நாடாளுமன்றத்தில் சுமார் 5 விழுக்காடு நேரம் மட்டுமே வீணாகியுள்ளது. இப்படி நாடாளுமன்றம் வீணடிப்பது என்பது, தேசிய பிரச்சனைகள் மீது நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைந்துவரும் அக்கறையின்மையையே காட்டுகிறது.

Leave a Reply