ம.பி மாநிலத்தின் ஹர்டா மாவட்டத்தில் உள்ள மச்சக் ஆற்றின்மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற இருரெயில்கள் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்திருந்த தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம் புரண்டதால் அந்த ரெயில்களின் சில பெட்டிகள் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வாரணாசியில் இருந்து நேற்றிரவு மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த காமாயானி எக்ஸ்பிரஸ் ரெயில் போபால் நகரில் இருந்து 160 கி.மீ.தொலைவில் உள்ள கிர்கியா பிரங்கி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது நேற்று காலையில் இருந்து பெய்துவந்த பெருமழையால் அப்பகுதியில் உள்ள மச்சக் ஆற்றுப் பாலத்தின் மீது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த வெள்ளத்தில் தண்டவாளத்திற்கு ஆதாரமாக இருந்த சரளை கற்கள் அடித்து செல்லப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 11.45 மணியளவில் அவ்வழியாக வந்த காமாயானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏழு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன.

சற்று நேரத்தில், இதே பாதை வழியாக எதிர்திசையில் ஜபல்பூர்-மும்பை இடையே செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இருந்து விலகிய ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகளும் தடம் புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போபாலில் இருந்து மூன்று சிறப்பு ரயில்கள் மூலம் மருத்துவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை அவர்கள் மீட்டனர்.

இந்த கோர விபத்தில் பலியான 25 பேரின் பிரேதங்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் நலமடைய பிரார்த்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், மீட்புக் குழுவினர் விரைவாக செயல்பட்டு வருகின்றனர். அங்குள்ள நிலைமையை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறேன் என்றும் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply