விழாக்களுக்கு ஏற்ப உடையணிவதில் வல்லவர் என வர்ணிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி, தான் அணிந்திருக்கும் அரைக்கை 'மோடி குர்தா' உருவான ரகசியத்தை இன்று அம்பலப்படுத்தினார் .

ஆசிரியர் தினத்தையொட்டி, தலை நகர் டெல்லியில் நடைபெற்ற மாணவ-மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கு சுவாரஸ்யத்துடன் பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, தான் அதிகம் விரும்பி அணிவதால் 'மோடிகுர்தா' என்ற அடையாளத்துடன் அழைக்கப்படும் அரைக்கைச் சட்டை உருவான விதம்பற்றி சுவாரஸ்யமாக விளக்கம் அளித்தார்.

நான் அணியும் உடைகளை தயாரிப்பதற்கென்றே 'பேஷன் டிசைனர்கள்' பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஒரு பரவலான கருத்து இருந்து வருகின்றது. எனக்கென்று எந்த பேஷன் டிசைனரையும் நான் வைத்து கொள்ளவில்லை. நான் அணியும் அரைக்கைச் சட்டைகளை நானே வடிவமைத்தேன். இதற்கு கைதேர்ந்த பேஷன்டிசைனர் தேவையில்லை.

எனது சிறுவயதில் என் துணிகளை நானே துவைத்து கொள்வேன். முழுக்கை சட்டைகளை துவைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். அதுமட்டுமின்றி, எனது பைக்குள் அவற்றை வைக்க போதுமான இடமும் இருக்காது. மேலும், குஜராத்தில் எப்போதுமே குளிர்காலமாக இருப்பதில்லை. அதிக மாதங்கள் வெயில் காலம்தான்.

எனவே, ஒரு நாள் என்னிடம் இருந்த முழுக்கை சட்டைகளின் கைப்பகுதியை எல்லாம் வெட்டி, அரைக்கை சட்டையாக்க முடிவுசெய்தேன். இப்படிதான், அரைக்கை சட்டை அணியும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

அப்போதெல்லாம் சட்டைகளை 'இஸ்திரி' போடகூட என்னிடம் பணவசதி இல்லை. ஒருபானையில் அடுப்புக்கரி நெருப்பை போட்டு அதன் மூலம் என் சட்டைகளை தேய்த்து, அணிந்து கொள்வேன். மாணவர்களாகிய நீங்களும் சுத்தமாக இருக்கவும், சூழ்நிலைக்கும், விசேஷங்களுக்கும் ஏற்றவகையில் உடைகளை தேர்வு செய்து அணிவதையும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என இந்நிகழ்ச்சியின்போது மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply