"துப்புரவு என்பது சுதந்திரத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்படிச் சொன்னவர் மகாத்மா காந்தி என்பதைக் கேள்விப்படும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அவரது அன்றாட வாழ்க்கை முறையில் சுத்தமும் சுகாதாரமும் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்தன.

அனைவருக்கும் சுகாதாரம் என்பது அவரது கனவாக இருந்தது.
'எனது மனதில் கூட எவரும் தனது அழக்கடைந்த பாதங்களுடன் உலவ நான் விட மாட்டேன்' என்று கூறியுள்ளார் அவர்.

'மேலை நாடுகளின் பல பழக்கங்களை அவர் குறை கூறியுள்ளார். ஆனால் தான் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அவர்களிடமிருந்தே கற்றதாகக் கூறியுள்ளார்.அவைகளை நம் நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

'ஒரு கழிப்பறை, வரவேற்பறையப் போல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தெரிந்து கொண்டேன். இதை நான் மேல் நாட்டைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.பல நோய்களுக்குக் காரணம் நமது கழிப்பறைகளின் அசுத்தமான நிலையே. மேலும் மனிதக் கழிவுகளை அங்கிங்கெனாதபடி எங்கு வேண்டுமானாலும் கொட்டுவதும் மற்றொரு காரணம் ஆகும் ' (நவ ஜீவன் 24.05.1925)

காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2,2014 அன்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுமைக்குமான 'ஸ்வச்ச பாரத் 'அல்லது 'தூய்மை இந்தியா ' என்ற ஒரு திட்டத்தைத் துவக்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கழிப்பறையுடன் கூடிய முழுமையான சுகாதார வசதி, திட மற்றும் திரவக் கழிவுகளை அகற்றும் வசதி, கிராமசுகாதாரம், பாதுகாக்கப்பட்ட, சுத்தகரிக்கப்பட்ட, போதுமான அளவு குடிநீர் இவை உறுதி செய்யப்படும். இத்திட்டம் காந்திஜி பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடையும் அக்டோபர் 2, 2019 க்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி ஒரேநாடு

Leave a Reply