தமிழகத்தில், 2016-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

தில்லியில் பாஜக தேசியகவுன்சிலின் கூட்டத்தில் அமித் ஷா, பாஜக தேசிய தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அமித்ஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் நாடுமுழுவதும் பாஜகவுக்கு எழுச்சி கூடியுள்ளது. தமிழ்நாட்டில் அமித்ஷாவின் வழிகாட்டுதலுடன் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை பாஜக எதிர்கொள்ளும். அதில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலைப் போல, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், "அமித் ஷா தலைமை ஏற்றுள்ளதால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடுமுழுவதும் பாஜகவுக்கு வலிமை கூடியுள்ளது. தமிழக பா.ஜ.க.,வுக்கு ஓரிரு தினங்களில் புதிய தலைவரை, அமித்ஷா நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதைத்தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஆகஸ்ட் கடைசிவாரத்தில் அமித் ஷா கேரளத்துக்கு செல்கிறார். அந்தப்பயணத்தின் தொடர்ச்சியாக அவரை தமிழகத்துக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்படும். அந்தத்திட்டம் சரியாக அமையாவிட்டால் செப்டம்பர் முதல்வாரத்தில் தமிழகத்தில் அமித் ஷாவுக்கு மாநில பாஜக சார்பில் பாராட்டுவிழா நடத்தப்படும்' என்றார்.

Leave a Reply