2019ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி எளிதாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ஏபிபி தொலைக்காட்சி சேனல், சி-ஓட்டர் அமைப்பு இணைந்து, நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 கடந்த லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அதிலும்கூட பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று சாதித்தது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்த, தேசத்தின் மனநிலை என்ற ஒருகருத்து கணிப்பை ஏபிபி சேனல் மற்றும் சி-ஓட்டர் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மாநிலங்களில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும், எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை பொறுத்து பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பது இந்த கருத்துக்கணிப்பில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்றபடி பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்றவற்றில் பாஜக கூட்டணி எளிதாக வெற்றிபெறும் என்று தான் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதும் இந்த கருத்துக்கணிப்பின் சாராம்சம்.

இந்த கருத்துக் கணிப்பில் இரு ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று, வட கிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது. அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 25 லோக் சபா தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைக்குமாம். இதேபோல, ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியை (6 தொகுதிகள்) பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக (13 தொகுதிகளில்) அமோக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் பாஜக, இதற்கு முன்பாக இவ்வளவு வலிமையுடன் இருந்ததில்லை. சமீப காலமாகத்தான் வடகிழக்கு மாநிலங்களிலும், ஒடிசாவிலும் பாஜக முன்னேறி வருகிறது.

பொதுவாக தலை நகர் டெல்லியில் எந்தமாதிரியான மனநிலையில் மக்கள் வாக்களிக்கிறார்களோ, அதுதான் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான பெரும்பான்மையாக எதிரொலிக்கும் என்பார்கள். ஏபிபி சேனல் கருத்து கணிப்புபடி, டெல்லியில் உள்ள ஏழு லோக் சபா தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெல்லப் போகிறது என்று தெரிகிறது இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள். இந்த சர்வே முடிவுகள், பாஜக கூட்டணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன.

அதே நேரம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் உள்ளிட்டவை 76 இடங்களை அள்ளும் என்கிறது, ஏபிபி சர்வே. காங்கிரஸ் கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு மொத்தம் உள்ள 129 தொகுதிகளில் வெறும் 21 இடமே கிடைக்கும் என்கிறது இந்த கருத்துகணிப்பு. பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதில் தென் இந்தியா முக்கிய பங்காற்றப்போகிறது என்பது உறுதி.

 

Tags:

Leave a Reply