மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மின் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தசந்திப்பில், மின் துறைக்கு தேவையான நீண்டகால சீர்திருத்தங்கள், தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள், திறனை மேம் படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மின்துறை ஆற்றும் முக்கிய பங்கு குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒப்பந்தங்களை ஏற்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்துறை அமைச்சர் ஆர்கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மின்விநியோக நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதற்கும், கட்டணத்தை சீராக்குவதற்கும், சரியான நேரத்தில் மானியங்களை வழங்குவதற்கும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தசந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசந்திப்பில், மக்களுக்கு 24 நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தசந்திப்புக்கு பின் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்துறையின் நிலைத்தன்மை, மீட்சி, திறன்மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மின்துறையில் தொழில் செய்வதை எளிமையாக்குவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பது, நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துவது, அரசு-தனியார் பங்கை மேம்படுத்துவது, மின் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

Comments are closed.