கேரள முதல்வரின் சமீபத்திய பேச்சு தூங்கிக் கொண்டிருக்கும் இந்து உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டது. அப்படி என்ன பேசினார் என்று பார்ப்போம்.

“சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று பக்தர்களால் நம்பப் படுகிறது. அது உண்மைதான். அதன் காரணமாகவே பக்தர்கள் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்கள். வடமாநிலங்களில் இருக்கும் சிலகோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்கூட பிரம்மச்சாரியாக இருக்கிறார்கள். அதுதான் உண்மை. அவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது”.

“அப்படி இருக்கும்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் சன்னிதானத்தின் கதவை பூட்டுவேன் என்று கூறிய சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மச்சாரியா? அவர் வாழும் இல்லற வாழ்க்கையை குறித்து நான் தவறாகச் சொல்லவில்லை. அதையும்கடந்து பெண்களுடன் தவறான தொடர்பு இருந்தது எர்ணாகுளத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத்தெரியும்”.

“தற்போது கோயில் தந்திரியாக இருக்கும் கண்ட்டரு மோகனரு கடந்த 2006ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, ஒரzபெண்ணுடன் இணைந்து புகைப்படம் எடுக்கப்பட்டது தெரிந்திருக்கும்”.

“சபரிமலை கோயில் என்பது திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்குக் கட்டுப்பட்டது. எந்தவிதமான தனியாருக்கும், குடும்பத்துக்கும் கட்டுப்பட்டது இல்லை”.

இதுதான் அவரின் பேச்சு.

ஒரு மாநிலத்தை ஆள்பவரின் இந்து எதிர்ப்பு சிந்தனையை இவரதுபேச்சு படம் பிடித்து காட்டுகிறது. ஒரு மாநில முதல்வர், ஒருகோவில் தந்திரியின் பேச்சுக்கு வரிக்கு வரி பதிலடி கொடுப்பதும், அந்த தந்திரி பற்றிய கிசுகிசுக்களை வெளிப்படையாக விமர்சிப்பதும் ஆச்சர்யமளிக்கிறது.

 

பினராயி விஜயன் அவர்களே! உங்களிடம் சில கேள்விகள்:

 

சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்டது', என்று சொல்கிறீர்கள். தந்திரியின் தகுதி மீதும் குற்றம் சுமத்துகிறீர்கள். அதுவும் 2006ம் வருட நிகழ்வு. பிறகு ஏன் அவரை இது நாள்வரை தகுதி நீக்கம் செய்யவில்லை?

தந்திரி என்பவர் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இதை எந்த சட்டம் சொல்கிறது?

கடவுள் பிரம்மச்சாரியாக இருந்தால், ஒரு பிரம்மச்சாரிதான் தந்திரியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெண் தெய்வங்களின் தலங்களில் பெண்கள் மட்டுமே அல்லவா பூஜைசெய்ய வேண்டும்!

முருகப் பெருமானுக்கு இரண்டு மனைவிகள். பூஜிப்பவருக்கும் இரண்டு மனைவிகள் இருக்க வேண்டுமா?

ஆண்களும் பெண்களும் நிறைந்த கேரளத்தை ஆண்மட்டுமே ஆள வேண்டுமா? பெண்களுக்கென்று ஒருபெண் முதல்வரை நியமியுங்களேன் பார்ப்போம்.

உங்கள் வீட்டிலுள்ள ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களை ஐயப்பனை தரிசிக்க அனுப்பினார்களா?

சபரிமலை பக்தர்கள் ஏதோ பெண்களுக்கு எதிரானவர்கள் என்று ஒருசித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள். நாற்பத்தியோரு நாட்கள் கடுமையாக விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்கும் ஒரு ஆண் பக்தரின் பின்னால் இருப்பது பெண்கள். அது மனைவியாகவோ, மகளாகவோ, தாயாகவோ, சகோதரியாகவோ இருக்கலாம். அவர்களின் ஆசாரம், அனுஷ்டானம் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பின்றி எந்த ஒரு ஆணும் சிறப்பானமுறையில் விரதமிருக்க முடியாது. மாலையணிந்த ஒவ்வொருவருக்கும் எல்லாப் பெண்களுமே தாய்தான். இதை உணராத கம்யூனிஸ்டுகளுக்கு எல்லா பெண்களுமே ரெஹண பாத்திமாதான்.

அடடே! யார் இந்த ரெஹணா பாத்திமா என்று கேட்கிறீர்களா? இந்த இஸ்லாமிய பெண்தான் சபரிமலையில் நுழைவதற்கு முயற்சிசெய்தவர். இவரைச் சுற்றி கேரள காவல்துறை ஐ ஜி தலைமையில் காவல்துறையினர் அரணாக இருந்து கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த அளவுக்கு இந்த பெண்மணிக்கு பக்தி அதிகமா? ஐயப்பனை பிடிக்குமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்துக்களை அசிங்கப்படுத்த வேண்டும் இதுமட்டுமே இவரின் எண்ணம்.

ரெஹணா பாத்திமா மார்ச் மாதம் ஒரு போராட்டத்தை நடத்தினார். அதில் “என் உடல், என் உரிமை” என்று சொல்லி தனது உடலில் துணியில்லாமல் இரண்டு படங்களை வெளியிட்டார். ஒன்றில் தர்பூசணி பழத்தால் தனது முகத்தை மூடி, மார்பகங்களை திறந்த நிலையில் வைத்து ஒருபடம். தனது முகத்தை காட்டியபடி, தர்பூசணி பழங்களால் தனது மார்பகங்களை மட்டும் மூடியபடி மற்றொரு படம். எப்பேர்பட்ட தியாகம்! இத்தகைய போராட்டங்களை நடத்துவதற்கு தைரியம் தேவையில்லை. வெட்கம், மானம், சூடு, சொரணை ஆகியவை இல்லாமல் இருந்தால் போதும்.

 

சமீபத்தில் மற்றொரு படம். அதில் நெற்றியில் விபூதி பட்டையுடன், கருப்புநிறத்தில் உடை, கழுத்தில் துளசி மாலையுடன் காட்சி தருகிறார். ‘அடடே ரொம்ப பக்தி', என்று நினைக்க வேண்டாம். அங்கங்கே துணிகளை விலக்கி தனது துடைகளை காட்டியபடி அமர்ந்த நிலையில் இருந்த தனது படத்தை வெளியிட்டார்.

இந்த பெண்மணியின் பக்திக்கு காவல்துறையினர் மனித கேடயங்களாக சபரி மலைக்கு அழைத்து செல்லும் விடியோக்களை பார்க்கும்போது ஆளுகின்ற கேரள அரசின் தரம் நமக்குப்புரிகிறது. இந்தப் பெண் பக்தையின் தரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சமூக வளைத்தளங்களில் அவரதுபெயரை வைத்து தேடுங்கள். உங்கள் குடும்பத்தாரிடம் அந்தபடங்களை காட்டுங்கள். இந்துக்கள் எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறோம் என்பதை அப்போதாவது நம் மக்கள் புரிந்து கொள்ளட்டும். இந்த நிலையில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக, ரெஹணா பாத்திமாவை கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில் தங்களுடைய சமூகத்திலிருந்து நீக்கியுள்ளது ஆறுதலான விஷயம்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் கோர்ட் உத்தரவை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் உணர்வுகளை மதித்து சட்டத் திருத்தம் கொண்டுவந்தது அரசு. மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், அந்த தடையை நடைமுறைபடுத்தச் சொல்லி யாரும் வலியுறுத்துவதில்லை.

கேரளத்தில் ஒரு கள்ளக் காதல் ஜோடியை பலர் தாக்குகிறார்கள். அடி உதைகளை தாங்கியபடி அந்த ஜோடி தன் வழியில் நடக்கிறது. சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள். இப்படி ஒருவீடியோ சமூக வளைத்தளங்களில் சில நாட்களுக்கு முன் வலம் வந்தது. கள்ளக்காதல் சட்ட விரோதமல்ல என்று கோர்ட் சொல்லிவிட்டது. கேரள முதல்வர் இத்தகைய ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கலாமே! அவர்கள் தங்கியிருக்கும் அறையின் வாசலில் காவல் துறையினரை நிற்க வைத்தாரா? அந்த சட்டத்திற்கு காவலனாக இருக்க முடியாதவர் சபரிமலை சட்டத்திற்கு மட்டும் காவலனாக இருப்பேன் என்பது எந்த நியாயம்?

ஓரின சேர்க்கை குற்றமல்ல என்று கோர்ட்தீர்ப்பு சொல்லிவிட்டது. நாங்கள் பக்க பலமாக இருக்கிறோம் தைரியமாக களத்தில் இறங்குங்கள்', என்று ஓரின சேர்கையாளர்களைப் பார்த்து கேரள அரசு சொன்னதா? ஆனால், சபரிமலைக்கு வரும் பெண்பக்தர்களுக்கு துணையிருப்போம் என்று சொல்வது என்ன நியாயம்.

முட்டையிடும் கோழிகளை கூண்டில் அடைக்கக்கூடாது என்று சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கோழிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்போகிறீர்களா? அல்லது கூண்டுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்போகிறீர்களா?

கேரள கழிவுகளை தமிழக எல்லையில் தொடர்ந்து கொட்டுகிறது கேரளம். இப்படி கொட்டச் சொல்லி எந்த சட்டம் சொல்கிறது?

ஒரு குட்டி கதையை படிப்போம்.

ஒரு அரசவை. அரசன் தனது மந்திரிகளுடன் அமர்ந்திருந்தான். அப்போது மந்திரி தனது இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கி கொண்டிருந்தார். அரசருக்கு கோபம்.

‘அரசே! இரவெல்லாம் சரியாக தூங்க முடிவதில்லை. என் மனைவி மிகவும் சத்தமாக குறட்டை விடுகிறாள்', என்று சொன்னார் மந்திரி. பக்கத்தில் இருந்த மற்றவர்களும் தங்களது மனைவியின் மீது இதே குற்றச்சாட்டை சொன்னார்கள்.

‘மனைவிகளால் இவ்வளவு பிரச்னையா? இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன். யாரங்கே! எல்லா மனைவிகளையும் கைதுசெய்து சிறையில் அடையுங்கள். ஆண்கள் நிம்மதியாக தூங்கட்டும். இந்தச்சட்டம் தற்போது முதல் அமலுக்கு வருகிறது', என்றான் அரசன்.

மனைவிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாள் அரசவை கூடியது.

‘அரசே! என் மனைவிக்கு குறட்டை விடும் பழக்கம் இல்லை. ஆனால், அவரையும் சிறையில் அடைத்துவிட்டது புதிய சட்டம்', என்று முறையிட்டான் ஒருவன்.

‘யாரங்கே! குறட்டை விடாத மனைவிகளை விடுதலை செய்யுங்கள்', என்று ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தான்.

அடுத்த நாள் அவைகூடியது. சோர்வாக அமர்ந்திருந்தார் மந்திரி.

‘அரசே! மனைவியை சிறையில் அடைத்திருப்பதால், நிம்மதியாக தூங்குகிறேன். ஆனால், எனக்கு உணவுசமைப்பது யார்?' என்று புதிய பிரச்னையை கிளப்பினார்.

‘அப்படியா! இதோ புதிய சட்ட திருத்தம். இனி மனைவிகள் பகலில் வீட்டிலும், இரவில் சிறையில் இருப்பார்கள்', என்றான் அரசன்.

அடுத்தநாள் அவை கூடியது. அப்போது அரசியார் அங்கு வந்தார்.

‘அரசே! மனைவிகள் இருக்கும் சிறையில் நேற்று தங்கினேன். எல்லோரும் தினமும் குறட்டை விடுவதில்லை. சில நேரங்களில் விடுகிறார்கள். சில நேரங்களில் விடுவதில்லை. ஆகையால் அவர்களை சிறையில் அடைப்பது சரியாகாது. அதே நேரத்தில் ஆண்களும் நிம்மதியாக தூங்க வேண்டும். அதற்கு ஒரேவழி, ஆண்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி விட்டால், குறட்டை பிரச்னை முடிவுக்குவரும்', என்றார் அரசி.

‘மிகச் சரியான யோசனை! அடுத்த வாரம் முதல், குறட்டைவிடும் பெண்களின் கணவன்மார்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுங்கள். சிறையில் இருக்கும் பெண்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்', என்றான்.

அடுத்த நாள் விடிந்தது அரசவை சுறுசுறுப்பாக இருந்தது. மந்திரி பேசினார்.

‘அரசே! என் மனைவி குறட்டையே விடுவதில்லை. நான் நிம்மதியாக தூங்கினேன். சிறை அவரை மாற்றிவிட்டது', என்றார் மந்திரி.

‘அரசே! என் மனைவி குறட்டை விட்டாள், ஆனால் அது தாலாட்டு மாதிரி ரம்மியமாக இருந்தது. நன்றாக தூங்கினேன்', என்றான் மற்றொருவன்.

அங்கே அமர்ந்திருந்த சாது எழுந்து பேசினார்.

‘அரசே! எனக்கு திருமணமாகவில்லை. ஆனால், நான்விடும் குறட்டை சத்தத்தில் நானே விழித்து கொள்கிறேன். இதற்கு ஏதாவது சட்டதிருத்தம் கொண்டு வர முடியுமா?' என்று கேட்டுவிட்டு அமர்ந்தார் சாது.

அரசனுக்கு பதில் தெரியவில்லை. சாது தன்பேச்சை தொடர்ந்தார்.

‘அரசே! சட்டம் என்பது மக்களை காப்பதற்கும், ஒழுங்கு படுத்துவதற்காகவும் கட்டப்படும் சுவர். ஆனால், ஒரு குட்டிச் சுவரை கட்டிவிட்டு அதை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு மக்களை பயன்படுத்துவது நல்ல அரசுக்கு அழகல்ல. மனைவி குறட்டை விடுகிறாள் என்று சொன்னவுடன், ‘கொஞ்சம் தள்ளிப்படு', என்று சொல்லியிருந்தால் பிரச்னை அத்தோடு முடிந்திருக்கும். சட்டங்கள் மக்களை காப்பாற்ற வேண்டுமே தவிர தங்களுக்காக சட்டத்தை காப்பாற்றும் அபத்தமான நிலைக்கு மக்களை தள்ளாதீர்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தர் சாது.

வாங்கி வைத்திருக்கும் ஈயத்தை உற்றுபார்த்து கொண்டிருந்தான் அரசன். ‘ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை', என்று ஒருபழமொழி உண்டு. அரசனைப் பார்த்து இளித்தது ஈயம்.

சமூகத்தையும், சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்ளும் நிலையில் கேரளம் இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. திரு. அமித் ஷா சொன்னதைப் போல கேரள அரசு நெருப்போடுதான் விளையாடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமென்றால், திரு பினராயி விஜயன் அவர்கள் ரெஹனா பாத்திமாவிற்கு ஒரு கோவில் கட்டட்டும், நைவேத்யத்திற்கு நாமும் இரண்டு தர்பூசணி பழங்களை வாங்கி அனுப்புவோம். அதே நேரத்தில் அந்த கோவிலில் தந்திரியாவதற்கு அவர் என்ன தகுதியை வகுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இறுதியாக, மதுரையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஒரு சிறுமிகையில் ஒரு பதாதையோடு நின்றார். அதில், “என்னுடைய 50 வயதிற்கு பின்னர்தான் சபரிமலைக்கு வருவேன்” என்று அதில் எழுதியிருந்தது. “எங்களுக்கு கோர்ட் உத்தரவு எல்லாம் தெரியாது. என்னுடைய மகளுக்கு இப்போது 10 வயது. இனி 50 வயது வரையில் காத்திருப்பார். பின்னர் வந்து அய்யப்பனை தரிசனம் செய்வாள்” என்று அந்தகுழந்தையின் தந்தை சொல்லும்போது, எத்தனை பினராயி விஜயன்கள் வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது என்று புரிகிறது. இளித்தது ஈயம், வெளுத்தது மதச்சார்பின்மை சாயம். உறங்கிக்கொண்டிருக்கும் இந்து உணர்வு விழித்துக் கொள்ளும் நேரம். விழித்துக் கொள்ளுங்கள்.

நன்றி – சாது ஸ்ரீராம்

Leave a Reply