ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து 25-ந்தேதி புறப்பட்டு, 26-ந் தேதி நியூயார்க் போய்ச்சேருகிறார்.

27-ந் தேதி ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் இடையே பிரதமர் மோடி, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்துகிறார். . அதே நாளில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், வங்கதேசபிரதமர் ஷேக் ஹசீனா, உலகவங்கியின் தலைவர் ஜிம்யாங் கிம், நார்வே பிரதமர் எர்னா சொல் பெர்க், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கிற விழாவில் கலந்து கொள்கிறார்.

28-ந்தேதி நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்க கார்டன் அரங்கில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு தருகிறார்கள் .இது வரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்களில், போப் ஆண்டவருக்கு அடுத்ததாக, மடிசன் சதுக்கத்தில் மிகப் பெரும் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றப் போகும் முதல் வெளிநாட்டு தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் உரையைகேட்க மடிசன் சதுக்கத்தில் இருக்கைகள் ஏற்கனவே ரிசர்வ் செய்யட்டுவிட்டன. அரங்கில் 20 ஆயிரம்பேர் மட்டுமே அமர முடியும். இருப்பினும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவருடைய உரையைகேட்க விருப்பம் தெரிவித்ததால் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பிரமாண்ட திரைகளில் மோடியின் உரையை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த வரவேற்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதை அமெரிக்காவில் உள்ள 20 பெருநகரங்களில் வாழும் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

29-ந் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகை செல்லும் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரவுவிருந்து அளித்து கவுரவிக்கிறார். இரு தலைவர்களின் சந்திப்பு மறுநாளும் (30-ந்தேதி) தொடர்ந்து நடக்கிறது.

நியூயார்க் நகரில் இருக்கும் போது மன்ஹாட்டன் பகுதியில் உள்ள பேலஸ் ஹோட்டலில் தங்கும் பிரதமர் மோடியை, இரண்டுநாள் வாஷிங்டன் பயணத்தின் போது அங்குள்ள அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்க அதிபர் ஒபாமா ஏற்பாடுசெய்துள்ளார்.

'பிளையர் ஹவுஸ்' என்ற பெயரால் அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் இந்தவிருந்தினர் மாளிகையை அந்நாட்டு மக்கள் மிகவும் ராசியான ஒரு இடமாக கருதிவருகின்றனர். 190 ஆண்டு காலமாக அமெரிக்க அரசியலில் பெரும் திருப்பங்களை இந்த விருந்தினர் மாளிகை உருவாக்கியுள்ளது .

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் தனது அமெரிக்க பயணத்தின் போது இந்த மாளிகையில் தங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இங்கு தங்கியதில்லை.

சுமார் 200 ஆண்டுகாலமாக அமெரிக்க அதிபர்கள் இந்த 'பிளையர் ஹவுஸ்' மாளிகையை தங்களுக்கு பலன் தரும் அரசியல் ஆயுதமாக கருதி வந்துள்ளனர்.

வாஜ்பாய்க்கு பிறகு, தற்போது பிரதமர் நரேந்திர மோடி இங்கு தங்குவதால், ஒபாமா-மோடி சந்திப்புக்கு பின்னர், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளில் இன்னும்நெருக்கம் அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply