ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டியும், எழும்பூர் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றாமல், தொடர்ந்து இயக்கவும் கோரி, பா.ஜ., சார்பில் 25ம் தேதி தர்ணா நடைபெறும்’ என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை வாசிகளின் வாழ்வின் ஓர் அங்கமாக இணைந்துவிட்ட எழும்பூர் ரயில் நிலையம், இட நெருக்கடியைக் காரணம் காட்டி தாம்பரத்துக்கு மாற்றப்பட உள்ளது.

வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் 16 ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அங்கேயே வந்தடைவதால் தான் இடநெருக்கடி எனக் கூறப்படுகிறது.ராயபுரம், இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம். இதை, சென்ட்ரல், எழும்பூர் போல மூன்றாவது முனையமாக மாற்றி, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் 16 ரயில்களையும் அங்கிருந்து இயக்கினால், எழும்பூர் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.தாம்பரம் ரயில் நிலையத்தில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டால், 40 ஆயிரம் பயணிகள் மட்டுமின்றி, அவர்களுடன் வருபவர்கள் என, தினம் ஒரு லட்சம் பேர் வருவதும் போவதும், சொல்லி மாளாத அவதியை ஏற்படுத்தும்.

சாதாரணமாகவே கூட்ட நெரிசலாலும், போக்குவரத்து நெரிசலாலும் திணறும்போது, அதிகப்படியான பயணிகளால் தாம்பரம் பகுதி மேலும் கடும் நெருக்கடியைச் சந்திக்கும். இதற்கு மாற்று வழியாக, 72 ஏக்கர் பரப்பளவுள்ள ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3.5 கி.மீ., நீளமும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும், வந்து போவதற்கு சாலை வசதிகளும் உள்ள இடம் ராயபுரம். சென்ட்ரல் ரயில் நிலையம், 12 நடைமேடைகளுடன் 950 மீட்டர் நீளமுள்ளது.

ஒன்பது நடைமேடைகள் கொண்ட எழும்பூர் ரயில் நிலையத்தின் நீளம் 750 நீளம். ஆனால், 16 மேடைகள் அமைப்பதற்கு வசதியுள்ள ராயபுரம் ரயில் நிலையத்தின் நீளம் 1,015 மீட்டர். அகலம் 420 மீட்டர் என, விரிவாக்கம் செய்ய இடவசதி உள்ளது.ஆகவே, ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டியும், எழும்பூர் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றாமல், தொடர்ந்து இயக்கவும் கோரி, பா.ஜ., சார்பில் 25ம் தேதி மாலை 3 மணிக்கு மெமோரியல் ஹால் அருகில், எனது தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெறும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply