நேற்று வரை பாஜக மாநில தலைவர், இன்று தெலுங்கானா ஆளுநர், கடும் உழைப்பிற்கு கிடைத்த பரிசு, யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சாமானியனை  சரியான நேரத்தில் அங்கீகரிப்பதே பாஜக. அது தமிழிசை சௌந்தர் ராஜனின் அரசியல் வாழ்விலும் நிகழ்ந்துள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி.

தமிழிசை சௌந்தர் ராஜன் பாஜக.,வுக்கு எதிர் சித்தாந்தங்களை கொண்ட காங்கிரஸ் கட்சியின், வலுவான அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை குமரி ஆனந்தன் தமிழக அரசியலில் தனக்கென வலுவான தடத்தை பதிந்தவர். பொதுவாக அரசியல் வாரிசுகள் உருவாக்கப்படுவார்கள், தானாக உருவாவது இல்லை, பிறப்பு ஒன்றே அவர்களின் ஒரே தகுதி.

ஆனால் தமிழிசை தானாக உருவான வாரிசு, அவரது குடும்பம் இவரது அரசியல் ஆர்வத்தை நிராகரித்தது, மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்றே விரும்பியது. எவர் ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ அதுவாகவே ஆவர் என்பது இறை விதி. அதற்கிணங்க இவரது அரசியல் தேடல் பாரதிய ஜனதாவின் பக்கம் இவரை இழுத்து வந்தது எனலாம்.

இவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவியாக இருக்கும் பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு தேவையான இரத்தத்தை, எந்த எதிர்பார்ப்புமின்றி தந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் சேவை மனப்பான்மையையும், 1996ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இவரது தந்தைக்காக தேர்தல் வேலை பார்த்த பொழுது, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக.,வையும், அதன் தொண்டர்களின் கட்டுக்கோப்பையும், அர்ப்பணிப்பையும் கண்டு வியந்து, பின்னர் தன் தந்தையை எதிர்த்துக் கொண்டு பாஜக.,வில் இணைந்தவர் இவர்.

1999-ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி தலைவர்.  2001-ஆம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளர். 2007-ஆம் ஆண்டு மாநில பொதுச் செயலாளர் , 2010-ஆம் ஆண்டு மாநில பாஜக துணை தலைவர்  கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய செயலாளர். பின்னர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக மாநில தலைவர் என இவரது 20 வருட அரசியல் பயணம் பல ஏற்ற இறக்கங்களை, ஒரு குடும்ப தலைவியாக வீட்டையும், ஒரு அரசியல் தலைவராக பொது வாழ்க்கையையும் சமாளித்து செல்வதில் பல சங்கடங்களையும்  கண்டது.

அதுவும் இவர் மாநில தலைவராக இருந்த கால கட்டத்தில்தான், தமிழகத்தில் பாஜக.,வுக்கு எதிராக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பொய்களும், வக்கிரங்களும் நிறைந்த பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது, அதாவது இந்தியாவில் எங்கும் கண்டிராத எதிர் கட்சிகளின், தன்னார்வ அமைப்புகளின், பிரிவினை வாதிகளின், மத அடிப்படை வாதிகளின் ஒற்றுமையை இங்கு காண நேர்ந்தது. சமூக ஊடகத்தில் இவர் ஒரு கருத்து போட்டால், ஒரு சில நிமிடங்களில் அர்த்தமே இல்லாத, கீழ்த்தரமான, தனிமனித வெறுப்பை மட்டுமே தாங்கிய ஓராயிரம் எதிர் கருத்துக்கள் (comments) வரிசைக் கட்டி நிற்கும். அவற்றில் பெரும்பாலானவை  எதிர் கட்சிகளின் போலி கணக்குகளே. ஆனால் அதை முகம் சுளிக்காமல் அவர் எதிகொண்ட விதமே ஒரு சிறப்பு.

தாழ்த்தப் பட்டோரின் நலனில் அக்கறை, அவர்களது இல்லங்களுக்கு உரிமையாக சென்று உணவருந்துவது, வாரம் தோரும் தவறாமல் கட்சி தலைமையகத்தில் குறைதீர் முகாம் நடத்தி மக்களிடம் மனு வாங்குவது,  என இவரது கடும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமே இது. இதை தமிழக பாஜக.,வினர் மட்டும் அல்ல, தமிழக மக்களே மகிழ்ச்சியில் திளைப்பதை வைத்தே  நாம் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

 

 

 

Comments are closed.