பிரதமர் நரேந்திர மோடியை சபரிமலைக்கு அழைத்து சாமி தரிசனம் செய்யவைக்க கேரள பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கேரளா பாஜக முன்னாள் தேசிய செயலாளர் கிருஷ்ண தாஸ், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மனோகரன், சபரி மலை அய்யப்ப சேவாசமாஜம் துணைத் தலைவர் ராஜ சேகரன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்று அங்கு அவர்கள் மத்திய அமைச்சர் உமா பாரதியை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி சபரிமலை வருகை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். சபரிமலைக்கு நரேந்திர மோடி வரும் போது கடைபிடிக்க வேண்டிய ஆச்சார விதிமுறைகள் பற்றி அவர்கள் உமா பாரதியிடம் எடுத்துக் கூறினார்கள்.

மேலும் சபரிமலையில் வளர்ச்சி பணிகள் நடைபெற மத்திய அரசு உதவிசெய்வது குறித்தும் சபரிமலையை தேசியவழிபாட்டு ஸ்தலமாக அறிவிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உமாபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, வருகிற 27–ந்தேதி நரேந்திரமோடி சபரிமலைக்கு வந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வருகையையொட்டி சபரிமலையில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் சிலநாட்களில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தொடங்க உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி சபரிமலைக்கு கொச்சிவரை விமானத்திலும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்வரை செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நரேந்திர மோடி நடந்து செல்லலாம் என்றும் தெரிகிறது.

Leave a Reply