பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்திருப்பதாக பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம், ஐ.ஜனதா தளம், லோக் ஜன சக்தி, தேசிய லோக்தளம், அகாலிதளம், சிவசேனா, தேசியமாநாட்டு கட்சி என்று பல்வேறு கட்சிகள் இணைந்திருந்தன.

பின்னர் இந்த கூட்டணியிலிருந்து தி.மு.க , லோக் ஜனசக்தி, தெலுங்குதேசம், திரிணாமுல், தேசிய மாநாடு, பிஜு ஜனதாதளம் , ஐக்கிய ஜனதா தளம் விலகியது. 2014 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க மேற்கொண்டது.

பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தெலுங்குதேசம், பாஜக கூட்டணி உறுதியானது. தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. இதுதவிர பல்வேறு மாநிலங்களில் புதியகட்சிகள் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பாஜக.,வுடன் கூட்டணி அமைத்துள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியை அடுத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கும் நிலையில் கூட்டணியில் புதியகட்சிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றன.

நாடுமுழுவதும் மொத்தம் 28 கட்சிகள் தே.ஜ.,கூட்டணியில் இணைந்திருப்பதாக அக்கட்சியின் துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமையக் கூடாது என்ற ஒரே செயல்திட்டம் தான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகதயாராக இருக்கிறார்கள். மாய வலையை விரிப்பதற்காக பொய்களையும், உண்மைக்கு மாறான அறிக்கைகளையும் வெளியிட்டுவருகின்றனர். வரும் தேர்தலில் 350க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

Tags:

Leave a Reply