மதுரையில் ஏப்., 28, 29ல் நடக்க உள்ள பா.ஜ., மாநில மாநாட்டுக்காக பார்லிமென்ட், சென்னை ராஜாஜி ஹால் மற்றும் ஜார்ஜ் கோட்டை முகப்புகளுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணியை ஏப்., 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலில் தன் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதற்காக ரிங்ரோடு அருகே 67 ஏக்கரில் ஒரு லட்சம் இருக்கைகள் போடுமளவு பந்தல் அமைக்கப்பட உள்ளது. முகப்பில் இடம் பெறும் பார்லிமென்ட், ராஜாஜி ஹால், ஜார்ஜ் கோட்டைகளை மக்கள் பார்க்கவும் வழி செய்யப்படும். மேடை 80 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் சுத்திகரிப்பு வசதியுடன் தினமும் தலா நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கென தனித்தனி “புட்கோர்ட்’ அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை ஏப்., 25க்குள் முடிக்க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மாநாட்டு பணிகளை நேற்று பார்வையிட்ட மாநில பொது செயலாளர் சரவணப்பெருமாள் கூறியதாவது: மாநாட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு லட்சம் உறுப்பினர்கள் உட்பட ஐந்து லட்சம் பேர் பங்கேற்பர். மாநில மருத்துவர் அணி தலைவர் உதிரன் ராஜேந்திரன், நிர்வாகி ரதி தலைமையிலான மருத்துவ குழு 2 நாட்களும் பந்தலில் இருக்கும். பா.ஜ., ஆளும் மாநில அரசுகளின் சாதனைகள் மற்றும் நிகழ்வுகளை விளக்கும் கண்காட்சி அமைக்கப்படும். அரசியலில் இம்மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும், என்றார்.

Tags:

Leave a Reply