“பெண்களின் மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல் படுவோருக்கு, இறுதிஊர்வலம் நடப்பது உறுதி,” என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிறப்பால் முஸ்லிம்மதத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை, திருமணம் செய்துள்ளார். மணம்முடிப்பதற்கு, ஒரு மாதத்திற்கு முன், ஹிந்து மதத்தில், அந்த பெண் இணைந்துள்ளார். உறவினர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் நடந்ததால், பாதுகாப்பு வழங்கக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், அந்த பெண் முறையிட்டார்.

அந்த மனுவை, கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், ‘திருமணம் செய்துகொள்ள, மதம் மாறியதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூறி, அந்த மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபை இடைத்தேர்தலுக்காக, நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டமுதல்வர் ஆதித்யநாத் கூறியதாவது: அலகாபாத் உயர் நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை நாம் நன்கு அறிவோம். திருமணத்திற்காக, மதம்மாற தேவையில்லை என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.’லவ் ஜிகாத்’ என்று அழைக்கப்படும் அந்தமுறையை ஒழிப்பதில், எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக சட்டம் இயற்றப்படும்.

எங்கள் சகோதரிகளின் அடையாளம், மரியாதை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், உங்களுக்கு இறுதி ஊர்வலம் நடப்பது உறுதி. சகோதரிகள் மற்றும் மகள்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. அதை நிறைவேற்ற, என்ன வேண்டுமானாலும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘லவ் ஜிகாத்’ குறித்து, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் நேற்று கூறுகையில், “நாட்டில், மதம் மாற்றி திருமணம் செய்துகொள்ளும், ‘லவ் ஜிகாத்’ சம்பவங்களை, மத்திய அரசு, ஆய்வு செய்து வருகிறது. அந்த முறையை ஒழிக்கும் சட்டத்தை இயற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஹரியானா அரசும், அதற்கான சட்டவழிகளை ஆராய்ந்து வருகிறது,” என்றார்.

Comments are closed.