வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம்  3 "காலியோ" ,"லாவோ" என்ற பெயருடைய இரண்டு கப்பல்கள் வாங்குவதில் வெற்றிபெற்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையை தேசியப் பத்திரிகைகள் வானளாவி புகழ்ந்து தள்ளின, என்று எனது முந்தைய பதிவுகளில் பார்த்தோம், இனி அது எவ்வாறு என்று பார்ப்போம்.

பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே வந்தேமாதரம் எனும் மந்திர சொல் பொறித்தக்கொடியுடன் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தினை அணுகுவது போலவும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூடி "வீரச்சிதம்பரம் வாழ்க" எனக் கோஷித்துக் கப்பல்களை வரவேற்பது போலவும், கார்ட்டூன் வெளியிடப்பட்டது.

சுதேசிக்கப்பல்களை வரவேற்று பாரதியார் எழுதியது பின்வருமாறு,
"வெகுகாலம் புத்திரப்பேறின்றி அருந்தவம் செய்து வந்தப்பெண்ணொருத்தி இரண்டு புத்திரர்களைப் பெற்றால் அவள் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைவாளோ அந்த அளவிற்கு ஆனந்தத்தினை இன்று நம் பாரதத்தாய் அடைந்திருக்கிறாள்.

வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் தாம் பிறந்து வளர்ந்த பாரதத்தாய்நாட்டிற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டார்கள்."

பாரதி சுதேசிக்கப்பல்களை வரவேற்றாலும் அவற்றிற்கு தரப்பட்ட பெயர்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இது பற்றி பாரதியே பேசுகிறார்.

"இந்தக்கப்பல்களுக்கு இப்போது கொடுக்கப்பட்ட பெயர்கள் எப்போதும் இருப்பனவா?இல்லை சுதேசி இயக்கத்திற்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படுமா? நம் கொள்கைகளுக்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படவேண்டும் என்றே எண்ணுகிறோம்." என்று கூறி சில சுதேசிப் பெயர்களையும் சிபாரிசு செய்தார்,
(ஆதாரம் இந்தியா, ஆனி 1907)

இந்த சூழலில்தான் இந்திய தேசியக் காங்கிரஸின் மாநாடு சூரத்தில் நடக்க இருந்தது, பாலகங்காதர திலகர் இந்த மாநாட்டிற்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாரதியார், உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்,

தொடரும……….,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply