லண்டன் சதி வழக்கு - 3 மதன்லால் திங்காராவிற்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கற்றுத்தரப்பட்டது, ஜெர்மன் மாஸர் பிஸ்டல்கள் அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.ஒரு வாரம் பயிற்சி நடந்தன, திங்காரா அதிலும் தேறினான். குறி பார்த்து சுடுவதில் பெரும் திறமை காட்டினான் திங்காரா. கர்ஸானை தீர்த்துக்கட்ட "அபிநவ் பாரத்" இயக்கம் தீர்மானித்த நாளான ஜூலை முதல் தேதி வந்தது.

திங்காரா ஜஹாங்கிர் மாளிகையை அடைந்து முன்பக்க இருக்கையில் அமர்ந்து அடிக்கடி தனது கோட் பாக்கெட்டை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான். இசை நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், பிரதம விருந்தாளியான சர் கர்ஸான் வில்லி கூட்ட அரங்கில் உள்ளவர்களின் கைகளை பிடித்துக் குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டே வந்தான்.

மதன்லால் திங்காராவை முதல் வரிசையில் கண்ட கர்ஸான் வில்லி மகிழ்ச்சியோடு தனது கரத்தினை நீட்ட – தன் கோட் பாக்கெட்டில் இருந்த பிஸ்டலை எடுத்து கர்ஸான் முகத்தினை நோக்கி ஐந்து முறை சுட்டான் திங்காரா, கர்ஸான் வில்லி அந்த இடத்திலேயே பிணமானான். திங்காரா சுட்ட ஐந்து குண்டுகளும் கர்ஸான் வில்லியின் முகத்தில் குறி தவறாமல் பாய்ந்து சின்னாபின்னமாகி அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்திருந்தன..

மண்டபம் முழுக்க கூச்சல் குழப்பமாக இருக்க , மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து திங்காராவை பாய்ந்து பிடித்தனர்.. திங்காரா மட்டும் சலனமற்ற முகத்தோடு, "கொஞ்சம் பொறுங்கள் எனது மூக்குக் கண்ணாடியை சரி பார்த்துக் கொள்கிறேன் , அப்புறம் என்னை பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான்.

மதன்லால் திங்காராவின் அஞ்சா நெஞ்சத்தினையும்,, அசராத தன்மையினையும் ஆங்கில பத்திரிக்கைகளே பக்கத்திற்கு பக்கம் பாராட்டி தள்ளின.

(தொடரும்)

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply