ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவை தொகுதிகளில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்கு 3 இடங்களை ஒதுக்குவதாக பா.ஜ.க உறுதியளித்துள்ளது. ஜம்முகாஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தொலைநோக்கு திட்ட அறிக்கை வெளியீட்டுவிழா ஜம்முவில் வியாழக் கிழமை நடைபெற்றது. அறிக்கையை வெளியிட்ட பாஜக எம்.பி அவினாஷ் ராய்கன்னா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 46 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதே போல ஜம்முவில் 37 தொகுதிகளும், லடாக்பகுதியில் 4 தொகுதிகளும் உள்ளன. இதில் காஷ்மீரில் உள்ள 46 இடங்களில், இடம் பெயர்ந்த பண்டிட் சமூகத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் படும்.

ஜம்மு, காஷ்மீரில் அமைதி நிலவச் செய்து, அந்த இடங்களில் உள்கட்டமைப்பு, சுற்றுலா துறைகளை முழுமையாக மேம்படுத்துவதே எங்கள்நோக்கம். நவீன மயமாக்கல், மக்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல்கவனம் செலுத்தப்படும். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம் பெயர்ந்த பண்டிட்களை மீள்குடியேற்றம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சட்டப் பேரவை, சட்ட மேலவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வகைசெய்யப்படும். ஜம்மு – காஷ்மீரில் பாஜக ஆட்சிக்குவந்தால், முதல் பணியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநிவாரணம், அவர்களது வாழ்வாதாரத்திற்கான மறு சீரமைப்புகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் கணக்கில் நேரடியாக நிவாரணத்தொகை செலுத்தப்படும்.

ஊழல், அரசியல் தலையீடுகள் இல்லாத நிர்வாகத்துடன் பொது மக்களின் நண்பனாக பாஜக அரசு செயல்படும் என்று அவினாஷ் ராய்கன்னா தெரிவித்தார்.

Leave a Reply