ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி நர்ஸ் உள்பட இந்தியாவை சேர்ந்த 46 நர்ஸ்களும் இன்று நாடு திரும்பினர். ஏர் இந்தியா சிறப்புவிமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு காலை வந்துசேர்ந்த அவர்கள் அங்கிருந்து கொச்சி வந்தனர்.

ஈராக்கில் கடந்த ஒருமாதமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஈராக் அரசுக்கு எதிராக போர் புரிந்து ஒவ்வொரு நகரமாக கைப்பற்றிவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திக்ரித் நகரை கைப்பற்றினர். திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த 46 நர்ஸ்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.   46 இந்திய நர்ஸ்களையும் சுமார் 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு கடந்த 4ம் தேதி கடத்திச் சென்றனர். அங்கு செல்போன் சேவை கிடைக்காத நிலையில் நர்ஸ்களால் தங்களது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.

இரு நர்ஸ்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 46 நர்ஸ்களின் குடும்பத்தினரும் பீதியில் உறைந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 1.40 மணிக்கு லெசிமா ஜெரோஸ் மோனிஷா தூத்துக்குடியில் இருக்கும் தனது தாயாரிடம் செல்போன் மூலம் பேசினார்.

அப்போது அவர், தீவிரவாதிகள் தங்களை திடீரென விடுவித்து விட்டதாகவும் ரெட்கிரசன்ட் என்ற செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் பஸ்மூலம் அனுப்பி வைத்ததாகவும், மொசூலில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள எர்பில் என்ற இடத்திற்கு தாங்கள் பஸ்சில்வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்தியாவிலிருந்து ஏர்&இந்தியாவின் போயிங் 777 விமானம் ஒன்று எர்பிலுக்கு அனுப்பப்பட்டது. அந்தவிமானம் நேற்று நள்ளிரவில் எர்பிலை அடைந்தபோது, விமான நிலையத்தில் அதை அனுமதிக்க மறுத்தனர்.

இதனால், விமானத்தை டெல்லிக்கு திருப்ப விமானி முடிவெடுத்தார். அவர் டெல்லி விமான நிலையத்துக்கு தகவல்கொடுத்தார். இந்த தகவல் வெளியுறவுத்துறை மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்க ஈராக் அரசு அனுமதித்தது. அதன்பின், 46 நர்ஸ்கள் உள்பட 183 இந்தியர்களுடன் ஏர்&இந்தியாவின் தனி விமானம் எர்பிலில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டது. நர்ஸ்களை தவிர மீதி 137 இந்தியர்களும் ஈராக்கின் வடக்கு பகுதியில் கிர்குக் என்ற இடத்தில் பணியாற்றியவர்கள். அவர்களுடன் 3 அதிகாரிகளும் வருகின்றனர்.

எர்பிலில் இருந்து 183 இந்தியர்களுடன் புறப்பட்ட தனிவிமானம் இன்று காலை 8.45 மணிக்கு மும்பைக்கு வந்து சேர்ந்தது. 10 மணியளவில் விமானம் புறப்பட்டு பகல் 12 மணியளவில் கொச்சிக்கு வந்தது. கொச்சி விமான நிலையத்தில் நர்ஸ்களை வரவேற்க அவர்களின் உறவினர்கள் காத்திருந்தனர். விமான நிலையத்தில் நர்ஸ்களை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வரவேற்றார். நர்ஸ்களை பார்த்ததும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டனர்.  இதற்கிடையே, நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தர்மகிரி என்ற இடத்தை சேர்ந்த நர்ஸ்கள் நீது தாமஸ், மமிதா மேத்யூ, சுமிபோல் ஆகியோர் ஈராக்கில் பாக்தாத் நகரில் உள்ளனர். அதே தர்மகிரியை சேர்ந்த சினி ஜிம்சன், சிலிபோல் ஆகியோர் ஈராக்கில் ரமாடியா என்ற இடத்திலும், அலினா ஜோஸ் என்பவர் வெஸ்ட் பக்ரா என்ற இடத்திலும் உள்ளனர். இந்த 6 பேரும் அங்கு பத்திரமாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் இவர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags:

Leave a Reply