ஐந்துமாநில பேரவைத் தேர்தலில் பாஜக அடையப்போகும் வெற்றிதான் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாகைசூட அடித்தளமாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணொலி முறைமூலம் அமித்ஷா திங்கள்கிழமை உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:


 மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தபிறகு, மக்கள் நலன்காக்க பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி, பல்வேறு பாதிப்புகளை விட்டுச் சென்றுள்ளது. அதனை சீரமைத்து தேசத்தை வலிமையாக்க 5 ஆண்டுகள் மட்டும்போதாது. குறைந்தது 30 ஆண்டுகளாவது பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தான் உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை மாற்றமுடியும்.

சர்வதேச அளவில் பொருளாதாரத்திலும், படைவலிமையிலும் வல்லமை பொருந்திய தேசமாக முன்னேற்ற முடியும். அதைக் கருத்தில் கொண்டு பாஜக தொண்டர்கள் செயல்படவேண்டும். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் வழக்கமானவை அல்ல. மாறாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அடித்தளமிடப்போகும் அதிமுக்கிய தேர்தல்கள். அவற்றில் பெறும்வெற்றிதான் பாஜகவை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமரவைக்கப் போகிறது என்றார் அமித்ஷா.

Leave a Reply