மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரேஅணியாகச் செயல்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

மேற்குவங்க மாநிலம், காரக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்பு களையும், கனவுகளையும் மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார். அவர், ஒரு பேரரசிபோல செயல்படுகிறார்.

மத்தியில் கடந்த 2 ஆண்டுகால பாஜக தலைமையிலான ஆட்சியில் ஊழல்புகார் கேள்விப்பட்டிரூப்பீர்களா? ஆனால், இந்தமாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஊழல் முறைகேடு புகார்கள் (சாரதா நிதி மோசடி), லஞ்சப்புகார்கள் (லஞ்சம் வாங்கும் ரகசிய விடியோ) குவிந்துள்ளன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும், லஞ்சம்வாங்கி கேமராவில் சிக்கியுள்ளனர்; அடுத்த தவணை லஞ்சம் எப்போது கிடைக்கும் என்றும் அந்தவிடியோவில் அவர்கள் கேட்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில், இங்கு புதிதாக எந்த தொழிற்சாலையும் தொடங்கப்பட வில்லை. மக்களுக்கு துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் மக்கள் தக்கபதிலடி கொடுப்பார்கள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக செயல்படும் காங்கிரஸ்கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்குவங்கத்தில் ஒரேதிசையில் பயணிக்கின்றன. மேற்குவங்கத்தில் அவர்கள் திரைமறைவில் கூட்டணி வைத்துள்ளனர். இதன் மூலம், இருமாநில மக்களையும் முட்டாளாக்குவதற்கு அவர்கள் முயல்கிறார்கள்.

இந்தமாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, காங்கிரஸýம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எந்த போராட்டத்தையும் முன்னெடுக்க வில்லை. வன்முறைக்கு தொண்டர்களை இழந்துள்ள பாஜக மட்டுமே, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக போராடிவருகிறது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தமாநிலத்தில் பாஜக அரசு அமைவதற்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply