5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். மக்களவையில் மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குச் சட்டத்தின் கீழ் செயல்படாமல் சட்ட  விதிகளை மீறி செயல்பட்ட என்ஜிஓக்கள் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. 2017 ஏப்ரல் 1 முதல் இன்று வரை இந்த விதிமுறைகளை மீறிய 5 ஆயிரம் என்ஜிஓக்களின் அனுமதி அன்னிய செலாவணி முகமை சட்டத்தின் கீழ் ரத்து செய்யப் பட்டுள்ளது. 2010-11 முதல் அனைத்து என்ஜிஓக்களும் தங்களது கணக்குகளை தாக்கல்செய்ய 2017 மே 14 முதல் 2017 ஜூன் 15 வரை ஒருமுறை சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் முறைப்படி பயன்படுத்தாததால் அங்கீகாரம் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 5 நிதியாண்டுகளில் அமலாக்கத்துறை சார்பில் அன்னிய செலாவணி முகமை சட்டத்தின்கீழ் 2,745 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 537 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டுள்ளன. 183 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் 289 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply