மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கு நேற்று சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாகவும் மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏர்காடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபையின் நடப்பு பதவிக்காலம் வரும் டிசம்பர் 17_ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான மத்தியப்பிரதேச சட்டசபையின் நடப்பு பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 16_ம் தேதியும், ராஜஸ்தான் மாநில சட்டசபையிந் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31_ம் தேதியும் சத்தீஷ்கர் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் ஜனவரி 4_ம் தேதியும் முடிவடைகிறது. இன்று நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. வடமாநிலங்களில் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படும். எனவே நவராத்திரி திருவிழாவிற்கு பிறகு தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்து தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் மத்திய பிரதேசத்தில் 230, ராஜஸ்தானில் 199, சத்தீஷ்கரில் 90, மிசோரத்தில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்ட்சபை தேர்தலில் முதன் முதலாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி வேட்பாளரை நிராகரிக்கும் பட்டனை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. அடுத்தாண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த 5 மாநிலங்களில் சட்ட்சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதியை இன்று தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என்று முதலில் தகவல் வெளியாகியது. ஆனால் நேற்று தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

நாட்டின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 1_ம் தேதியும், மத்தியப்பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 25_ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடக்கும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்தார். சத்தீஷ்கர் மாவட்டம் மலைப்பாங்கான பகுதியாகவும் நக்சலைட்கள் தொல்லை அதிகமாக இருப்பதாலும் அந்த மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. நவம்பர் மாதம் 11_ம் தேதி முதல்கட்டமாகவும் நவம்பர் 19_ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் டிசம்பர் மாதம் 4_ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் 5 மாநிலங்களிலும் வரும் டிசம்பர் மாதம் 8_ம் தேதி ஓட்டெண்ணிக்கை நடைபெறுகிறது. வரும் லோக்சபை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக இந்த 5 மாநில சட்சபை தேர்தல் நடக்கிறது. அதனால் இதை ஒரு மினி தேர்தல் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த 5 மாநில தேர்தல் முடிவானது லோக்சபை தேர்தல் முடிவின் முன்னோடியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் நேற்றுமுதல் அமுலுக்கு வந்தது. இனிமேல் தேர்தல் கமிஷன் அனுமதியின்றி எந்தவித புதிய சலுகைகளையும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அறிவிக்க முடியாது. வாக்காளர்களை கவரும் வகையில் எந்தவித விழாக்காளையும் அரசு நடத்தக்கூடாது. இந்த 5 மாநில அரசுகளின் செயல்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கிவிட்டனர். இந்த 5 மாநிலங்களிலும் 11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் போலீசாருக்கு உதவியாக 60 ஆயிரம் துணை ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். தேர்தல் வெளிப்படையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள ஏர்காடு மற்றும் குஜராத்தில் உள்ள சூரத் சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்காடு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரணமடைந்ததையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புனுத்தாக்கல் வரும் நவம்பர் 9_ம் தேதி தொடங்கி 16_ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை நவம்பர் 18_ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி தேதி நவம்பர் 20. வரும் டிசம்பர் 4_ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8_ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்தார். 5 மாநிலங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. மேலும் இந்த தேர்தலில் முதன் முறையாக தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply