நரேந்திர மோடி பிறந்த நாளான இன்று முதல், தமிழகத்தில் 5 நாட்கள் காஷ்மீர் வெள்ளநிவாரண நிதி வசூல் செய்யப்படும் என்று பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து, மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகளாவிய அளவில் மக்கள்மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி சீரிய தலைமையில், பாரதத்தில் நல்லாட்சி மலர்ந்து மணம்வீசிக் கொண்டுள்ளது. 17-9-2014 இன்று அவரது பிறந்த நாளை சீரும் சிறப்புமாகக் கொண்டாட சிறப்பான முன்னேற்பாடுகளை தமிழக பா.ஜ.க.வினர் உற்சாகமுடன் செய்து வந்தனர்.

ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைபேரிடர் (பெரு வெள்ளம்) காரணமாக, பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களின் துயர்துடைக்க எண்ணிய மோடி, ''பாஜக.,வினர் யாரும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். அதேசமயத்தில் காஷ்மீர் மக்களின் துயர்துடைக்க, உதவிக்கரம் நீட்ட வெள்ள நிவாரண நிதி வசூலிக்கவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழக பா.ஜ.க.வினர், மோடியின் பிறந்த நாளை மிக எளிமையாகக் கொண்டாடிவிட்டு, காஷ்மீர்மக்களின் துயரத்தை போக்கும் வகையில், தமிழகம் எங்கும் வெள்ள நிவாரண நிதி வசூல்செய்யும் பணியில் ஈடுபட்டு, அவரது பிறந்த நாளான 17-ந் தேதி (இன்று) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மக்களை சந்திக்க உள்ளனர் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாராது வந்த மாமணி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக பா.ஜ.க. சார்பில் என் நெஞ்சார்ந்த, உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறேன். அவர் காட்டும் வழியில், தளராது நடைபோட்டு நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய உறுதி எடுக்குமாறு எனது சகோதர, சகோதரிகளுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply