வடக்கே இருந்துவந்த தென்றல், தருண் விஜய் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழுக்காக குரல்கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய்க்கு, சென்னை டி.டி.கே.சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில், வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவில், பேரவையின் நிறுவனர்–தலைவர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப்பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. இன்று அதைச்சொல்கிற குரல்தான் புதியது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்; இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். மாநிலங்களவை உறுப்பினர்; ஆர்எஸ்எஸ் காரர் என்று அறியப்பட்டவர். இந்த கோரிக்கைகளை உயர்த்தி பிடித்துக் குரல்கொடுக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டுக்கு ஆனந்தம் கலந்த ஆச்சரியம்.

வடக்கு என்றாலே தமிழை மறுப்பது; இந்தியை ஆதரிப்பது என்ற கருத்து தருண்விஜய் அவர்களால் இன்று உடைக்கப்படுகிறது.

எல்லாவற்றிலும் விதி விலக்கு உண்டு. எல்லா ரத்தமும் சிவப்பல்ல, வெட்டுக் கிளிக்கு வெள்ளை ரத்தம் என்பதுபோல வடநாட்டார் எல்லாம் தமிழுக்கு விரோதிகள் அல்லர். விதிவிலக்காக வாய்த்திருக்கிறார் தருண் விஜய்.

நம்முடைய முன்னோடிகளும், தலைவர்களும் மொழியை ஏன் முன்னிறுத்தி போராடினார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

மொழி இருக்கும் நீளம் வரைக்கும் தான் நிலம் நமக்குச்சொந்தம். ஒரு காலத்தில் தமிழ்பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத்தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக அடியார்க்கு நல்லார் தெரிவிக்கிறார்.

'வட வேங்கடம்' வரைக்கும் நீண்டு கிடந்த தமிழ் நிலம் இன்று வெறும் 50,216 சதுர கிலோ மீட்டராகச் சுருங்கிவிட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்னப்பரப்பையும் இழந்துபோவோம்.

இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம்முகம் இரண்டையும் இழந்துபோவார்கள்.

அதிகார மையங் களிலும், கல்வி நிலையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் நிலை பெற்றால் தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம்.

இந்த தொலை நோக்கு பார்வைக்கு தோள்கொடுக்க வந்திருக்கும் தருண்விஜய் அவர்களை தமிழ் உலகம் பாராட்டுகிறது. அவரது கோரிக்கைகளுக்கு இந்தகூட்டம் கைதட்டிக் கைகொடுக்கிறது.

தெற்கே இருந்துவருவது தென்றல், வடக்கே இருந்து வருவது வாடை என்பார்கள். இன்று வடக்கே இருந்து தென்றலாய் வந்த வரை வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தருண் விஜய் எம்.பி. ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

உத்திர காண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தாலும், தமிழ் அன்னையின் மகனாகவாழ்ந்து கொண்டிருக்கிறேன். இலக்கியங்கள், காப்பியங்கள் நிறைந்த தமிழ்மொழியில் திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். திருக்குறளையும், திருவள்ளு வரையும் தெரியாதவர்கள் இந்தியாவை பற்றி தெரிந்திருக்க முடியாது. உலகளவில் பெருமைப்படும் தமிழ்மொழி பிறந்த தமிழ்நாட்டிலேயே, தமிழ்மொழி பேச மறுக்கின்றனர்.

குறிப்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடுமொழியாக இல்லாதது வருத்தம் தருகிறது. பாமர மக்களுக்கு புரியாதமொழியான ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இமயமலையைவிட உயரமான தமிழ்மொழியை நாடுமுழுவதும் எடுத்து செல்வதற்காக, முதல்கட்டமாக வடமாநிலங்களில் 500 இடங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளன. அதுவும் டேராடூனில் இருந்து தொடங்கப்படும். என்று  அவர் பேசினார்.

முன்னதாக தருண் விஜய், 'தி இந்து' வுக்கு அளித்த சிறப்புப்பேட்டி:

திடீரென்று வைரமுத்து உங்களுக்கு பாராட்டுவிழா நடத்துகிறாரே, இதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா ?

வேறென்ன தமிழ் தான் காரணம். அவர் நாத்திகர். நான் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கத்தில் உள்ளவன். கொள்கைகளைமீறி எங்களை தமிழ் தான் இணைத்திருக்கிறது. அவர் மிகப் பெரிய மனிதர். அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.

வடநாட்டை சேர்ந்தவர்கள் பெரியளவில் தமிழை கண்டு கொள்ளாத போது உங்களுக்குமட்டும் எப்படி இந்த தமிழ்ப்பாசம்?

நான்பிறந்த உத்தராகண்ட் மாநிலம், பாரம்பரியான புனித தலங்களை கொண்டது. அங்குள்ள ஆலயங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருவதை இளம் வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யா இதழின் ஆசிரியராக இருந்தபோதே பாரதியாரைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். திருவள்ளுவர், பாரதியார் வளர்த்த தமிழ், பல்வேறு பக்தி இலக்கியங்களைக் கொண்டுள் ளது. எனவே, தமிழ்மொழியை காக்கவேண்டும் என்ற ஈடுபாட்டின் பேரில் தமிழுக்காக குரல்கொடுத்துவரு கிறேன்.

தமிழ் மொழியை மத அடிப்படையில்தான் ஆதரிக்கிறீர்களா?

மதத்தின் பெயரால் தமிழுக்காக குரல் கொடுக்க வில்லை. ஆனால், தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களையும், கோயில்களில் உள்ள அந்தக்கால கல்வெட்டு களையும் ஒதுக்கிவிட்டு தமிழை கொண்டாட முடியாது. தமிழ் என்பது இந்தியாவின் பழமையும் பாரம் பரியமும் கொண்ட மொழி. இந்தக்காலத்தில் ஆங்கில கவர்ச்சி அதிகமாகிக் கொண்டே போவதால், வடக்கிலுள்ள முக்கிய நகரங்களில் இந்தியைமறப்பது போல் தமிழகத்திலும் தமிழ் புறக்கணிப்பு உள்ளது. நமது பாரம்பரியமான மொழிகளை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல.

நீங்கள் சார்ந்துள்ள பாஜக அரசு, 'குரு உத்ஸவ்', 'சமஸ்கிருத வாரம்', போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா?

ஒருவிஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக அரசு எந்த மொழியையும் யார்மீதும் திணிக்க வில்லை. இந்தியும், சமஸ் கிருதமும் நமது தேசிய மொழிகளாகும். இதை முன்னெடுக்க வேண்டிய செயலில்தான் அரசு இயங்கியது. தமிழர்கள் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும் வேண்டாம் என்றால் அதை அவர்கள் விட்டு விடலாம்.

தமிழுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?

திருவள்ளுவர் பிறந்தநாளை இந்தியமொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும். குஜராத் நீதிமன்றத்தில் குஜராத்தி மொழியில் வாதாடுவது போல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில்வாதாட அனுமதிக்க வேண்டும், இந்திய அரசின் கப்பல்கட்டுமான நிறுவனமான மாக்சான் டாக் , கடல்கடந்து வாணிபம் செய்த ராஜேந்திர சோழனின் படத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். சீக்கிரமே எங்கள் ஊரில் தமிழ்ப்பள்ளி ஒன்றை தொடங்க உள்ளேன்.என்று  தருண் விஜய் கூறினார்.

Leave a Reply