டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கிகணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடை வார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த பலனைப்பெற அதிகபட்ச குடும்ப வருமானத்துக்கான உச்ச வரம்பு மாதம் 12 ஆயிரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ராகுல்காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதி எந்த காலத்திலும் நிறைவேறாது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, ‘அரசியல் ஆதாயத்துக்காக வறுமையை மையக்கருவாக காங்கிரஸ் பலமுறை பயன் படுத்தி வந்துள்ளது. இந்தியாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் 1971-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வறுமையை ஒழிக்க ஒன்றுமே செய்யவில்லை.

உற்பத்தியை பெருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோட்பாட்டில் அவருக்கும் நம்பிக்கை இல்லை. வறுமையை மீண்டும் பகிர்ந்தளிப்பதை மட்டுமே அவர் நம்பிஇருந்தார்.

இப்படி கடந்த 50 ஆண்டுகளாக இந்தநாட்டை காங்கிரஸ் கட்சி தவறான பாதையில் வழிநடத்தியது. வறுமையை விரட்டுவோம் என்று வாக்குறுதி அளித்து 50 ஆண்டுகளாகியும் இன்னும் நாட்டில் 20 சதவீதம் மக்கள் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கூட கிடைக்காமல் வாழ்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு இந்த நாட்டின் ஏழைமக்கள் வஞ்சிக்கப் பட்டதற்கான பழியையும், பொறுப்பையும் காங்கிரஸ் கட்சிதான் ஏற்கவேண்டும்’ .

இதேபோல், மத்திய சட்டத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ’கடந்த 55 ஆண்டுகளாகவே காங்கிரஸ் ஆட்சி ஏழைமக்களுக்கு விரோதமான ஆட்சியாகவே இருந்துவந்துள்ளது. 1971-ம் ஆண்டு வறுமையை விரட்டுவோம் என்று இந்திராகாந்தி வாக்குறுதி அளித்தபோது நாட்டில் இனி வறுமையே இருக்காது என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம். ஆனால், என்ன நடந்தது. வறுமை ஒழிந்து விட்டதா?

நான் டெல்லியில் இருந்து ஒருரூபாய் அனுப்பினால் விவசாயிகள் கையில் 15 பைசாதான் போய் சேருகிறது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதுபோல் தான் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எப்போதுமே நிறைவேறியதில்லை. இனிமேல் நிறைவேற போவதுமில்லை’என்று குறிப்பிட்டார்.

Leave a Reply